Thursday, 22 October 2015

வெங்கட்சாமிநாதன்.என்னும் விமரிசனப்போராளி

வெங்கட்சாமிநாதன்.என்னும் விமரிசனப்போராளி                              வெ.சா.அவர்களின் மறைவுச்செய்தியை இன்று காலை நாளேட்டில் கண்டேன்.இயல்பாகவே நினைவு பின்னோக்கிச்சென்றது.நான் 1980களின் தொடக்கத்தில் மார்க்சியத்தின்பால்   ஆர்வம் கொண்டிருந்தேன்.காரணம் என் வர்க்க உணர்வன்று; தமிழ் இலக்கிய மாணவனான நான் அப்போது மார்க்சிய ஆய்வாளர்களின் –ஆதாரங்களோடு கூடிய தர்க்கரீதியான பார்வையிலும் அவற்றுக்குக் காரணமான  மெய்யியலிலும் கொண்ட ஈர்ப்பேயாகும். இந்த ஈர்ப்புக்குப் பெரிதும் கைலாசபதியவர்களின் நூல்களே விசையாயிருந்தன.அப்புறம் அதற்குத்தக நிற்க வேண்டும் என்கிற ஆர்வமும் பிடர் பிடித்து உந்தியது. என் வகுப்புத்தோழரான சௌந்தரபாண்டியன் தம் ஊராகிய ஒம்பத்து வேலியில் நிகழ்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க்க் கிளைக் கூட்டமொன்றிற்கு என்னை அழைத்துச் சென்றார் அங்கேதான் முதன் முதலாகக் கம்பீரமிக்க,அவசர நிலைக் காலத்திலேயே காவல் துறையுடன் கண்ணாமூச்சி ஆடிய ,வர்க்கப் போராட்டமே சரியானது என்று இன்றளவும் உறுதி தளாராத அதே வேளையில் சுய சாதி மறுப்பாளராக ஆதிக்கச் சாதிகளுக்கு எதிரான செயல் வீர்ராகத் திகழ்கிற சாகசத்தோழர் அறிவுறுவோன் அவர்களை முதன்முத்லாகச் சந்தித்தேன்.படிப்படியே தஞ்சைக் கிளை உறுப்பினர்,கிளைச்செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர் என்ற நிலைகளில் அமைப்புக்குள் இயங்கினேன்.உற்சாகம் கரை புரண்டோடிய காலம் அது.மிக்ச்சில ஆண்டுகளே அமைப்பில் இருந்தேன்.என் கருத்து வேறுபாடு காரணமாக விலகினாலும்,அறிவார்ந்த, அன்பார்ந்த தோழர்களோடு கொண்ட   நல்லுறவு – விதி விலக்கானோர் இல்லாமல் இருக்க முடியுமா என்ன!-தொடர்கிறது. நானும் வேறெந்த அமைப்பிலும் சேரவில்லை.                                                       எந்தப் படிப்புப் பழக்கம் என்னைத் த.மு.எ.ச.விடம் கொண்டு சென்றதோ,ஒரு வேளை,அதுவே வேறுபடவும் செய்துவிட்ட்தோ? ஆம். இங்கேதான் தஞ்சை ப்ரகாஷ் வழி, நூல்களால் அறிமுகமான வெ.சா. வருகிறார்.( வேறு சிலர் மூலம் அறிமுகமான நூல்கள்,நேரடி அனுபவங்கள் முதலியன பற்றியும் பேச ஆசைதான்.பிறகு பார்ப்போம் )  
  
 நான் முதலில் படித்த வெ.சா. நூல் ஓர் எதிர்ப்புக் குரல்.கலை,இலக்கியங்களில் நுட்பமான தோய்வும் தமக்கென ஒரு பார்வையும் பரந்த படிப்பறிவும் தர்க்கத்தோடு கூடிய எகத்தாள நடையும் என்னைக் கவர்ந்தன.குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.உருசியத் திரைப்பட இயக்குநர் ஐசன்ஸ்டின் தமக்குச் ` சீன வரிவடிவம் திரைப்படத்தில் குறிப்புணர்த்து நுட்பத்திற்கான வெளிச்சம் தந்தது `என்று கூறியிருப்பதாக ஒரு கட்டுரையில் வெ.சா. எழுதியிருந்தார். `மார்க்சிய`ஆய்வாளர் ஒருவர் `வரி வடிவத்திற்கும் திரைக் கலைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் `என்று எள்ளி நகையாடினார். அது கண்ட வெ. சா. `தமிழ் நாட்டு மார்க்சிய வாதிகள் வேறு எதையும் படிக்க மாட்டார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன்; சோவியத் நாட்டுப் புத்தகங்களைக் கூட அவர்கள் படிப்பதில்லை என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன் ` என்றெழுதி சோவியத் நாட்டிலிருந்து வெளிவந்த ஐசன்ஸ்டின் புத்தகத்திலிருந்து ஆதாரத்தோடு தாம் எழுதியதை நிறுவியதோடு சீன வரி வடிவத்திற்கும் திரைக் காட்சிக்குமான தொடர்பையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்.                           தொடர்ந்து அவருடைய நூல்களைப் படித்து வந்தேன் .பொதுவுடைமை , திரவிடக்கட்சிகள் , அவற்றின் கருத்து நிலைகள் ஆகியவற்றின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து வந்தார்.அவற்றில் பேரளவு நியாயங்களும் இல்லாமலில்லை.ஆனால் அவை `நடுநிலையானவை யில்லை. `வேட்டி விளம்பரத்தில் மறைக்கப்பட்ட பெரியார் `என்னும் என் முந்தைய பதிவில் ( 12/10/2015 ) `திரு கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் இராஜாஜியை ராஜகோபாலாச்சாரி என்றும் ஈ.வெ.ரா.வைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்றும் குறிப்பிட்டுள்ள நேர்மை பற்றி வாய்ப்பிருப்பின் விரிப்பேன் ` என்று எழுதியிருந்தேன் . அந்த வாய்ப்பு ஒர் இரங்கலுரையினூடாக,அமரரான அவர் பற்றிய எதிர்மறை விமரிசனக் குறிப்பாகவும் அமைவது நயத்தக்க நாகரிகமன்றுதான்.என்றாலும் அவரை நினைவுகூரும்போது இதுவும் வந்து நிற்கிறது. வெ.சா.போன்ற ஓர் ஆளுமையின்` ஆன்மா ` சம்பிரதாய இரங்கலுரையை எள்ளி நகையாடும் என்றே கருதுகிறேன்.
 `  தமிழக வரலாறு – ராஜாஜி,ஈ.வெ.ரா., காமராஜ் ,அண்ணாதுரை ,எம். ஜி.ஆர்.,கருணாநிதி என்னும் இவ் ஆறு சரித்திர நாயகர்களால் எழுதப்பட்டுள்ளது `( கணையாழி , ஜூன் ,2000 ,ப. 20 )என்று சொல்லி விட்டு , சரித்திர நாயகர்களுக்கு விருதுகள் , பட்டங்கள் தேவையில்லை   வெறும் பெயரே போதும் என்று பின் குறிப்புத்தந்தார் வெ.சா.
ஆனால் ராஜாஜி என்பது வெறும் பெயரா ? வரலாற்றில் சற்றுப் பின்னோக்கிப்போவோம். 06/06/1937 `குடி அரசு ` ஏட்டில்
     எலெக்‌ஷனுக்கு நாலு நாளைக்கு முன் தொப்பென்று குதித்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் திடீரென்று ராஜாஜியாகி இன்று மாகாணத் தலைவராக கவர்னரை அடிக்கடிபார்க்கவும் ,கவர்னர் அடிக்கடி கூப்பிடவுமான பத்வி அடைந்து விட்டார். முதல் மந்திரி ஆகத் தவம் கிடக்கிறார்.ஆனாலும் ஆவார்.                                                 என்று எழுதினார்  பெரியார். அவ்வாறே ராஜாஜி முதல் மந்திரி ஆனார். பிம்பக்  கட்டமைப்புக்கும் , பதவிப் பேற்றுக்குமாக உருவாக்கப் பட்டு இயற்பெயரே போல் வழக்கில் நிலைத்து விட்ட பெயரை வெ.சா. உள் நோக்கத்தோடு ஆண்டிருக்கிறார் என்று கருத முடியவில்லை.ஆனால் அவரது கூரிய விமரிசனக் கண்ணுக்குத் தட்டுப்படாதது ஏன் ?                வள்ளுவர் சொல்கிறார் (என்ன இருந்தாலும் நான் தமிழாசிரியன்தானே)        ` நுண்ணிய நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் ` என்று. வெ.சா. அண்மைக் காலமாக இந்துத்துவச் சார்பை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார். ஒட்டிய சார்பின் உறு பொருளை ஏற்காதார் முன் செற்றமும் கலாமும் செய்யாது விவாதப் பண்பாட்டுப் பாங்கறிந்து வைக்க வேண்டும்.இந்தப் பாங்கு சனநாயக நாகரிகம். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காணச்சொன்னவரும் வள்ளுவர்தானே !தோரணைகளில் வெ.சா.  எல்லை மீறியதுபோல் தோன்றலாம்.நடைமுறையில்அப்படிப்பட்டவரல்லர்   .வெ.சா. தமிழ்ச்சமூக இரசனை பற்றிக் கொண்டிருந்த அவநம்பிக்கை நியாயமானது.                 

         ********************************************************************             டி.எஸ்.சொக்கலிங்கம்: அரசியல்,இதழியல் என்னும் என் நூலுக்குக் கறாரான,ஆய்வு பூர்வமான – தகவல்கள் இருக்கின்றன ஆனால் உயிரோட்டமில்லை எனச் சரியான- மதிப்புரை எழுதியிருந்தார்                                          .               ***************************************************                      தமிழ் இனி 2000 மாநாடு சென்னையில் செப்டம்பர் முதல் நாள் தொடங்கியது.எனக்கும் வெ.சா.அவர்களுக்கும் ஒரே அறை.இரவு நண்பர் சலபதியுடன் திராவிடக் கட்சிகளின் மேடைப் பேச்சுப் பற்றி ஆராய்ந்த பெர்னாட் பேட்- அழைத்து வர விமான நிலையம் சென்று, வந்த பின் உணவருத்தி,அரட்டையடித்து அறைக்குத் திரும்பும் போது நள்ளிரவாயிற்று.தூக்கக் கலக்கத்துடன் ஆனால் இன்முகத்தொடு வரவேற்றார் வெ.சா. ( நவீன இலக்கியக் குழாத்தின் இராக் கூத்துக்கள் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்தானே ! )சுருக்கமான சிலநொடி அறிமுகத்திற்குப்பின் அசதி என்னை  உறக்கதில் ஆழ்த்தியது.காலையில்,என்னை இதமாக எழுப்பினார் வெ.சா. ~ காப்பி வந்திருக்கு சாப்ட்டுட்டுத் தூங்குங்கோ. அப்பறம் வருமோ என்னவோ ` என்றார்.அப்படியே செய்தேன்.( என் காப்பிப்பித்து மூஞ்சியில் எழுதி ஒட்டியிருந்ததோ! அல்லது தம்மைப்போல் பிறரையும் எண்ணினாரோ அறியேன்.) ஓர் இனிய அனுபவம் அது.மறு நாள் அதை நன்றாக உணர்ந்தேன்.அன்று மாலை தஞ்சையில் நிகழ்ந்த தஞ்சை ப்ரகாஷ் நினைவுக்கூட்டத்தில் பேசப்புறப்பட்டு விட்டார் வெ.சா .இரவு வேறொருவர் அறையைப் பகிர்ந்து கொண்டார். காலை.எட்டறை மணியளவில் கண் விழித்தேன். ~சார் , காப்பி வந்துதா?~ என்றேன். ~ ஒரு மணி நேரமாச்சு.நீங்க அசந்து தூங்கினீங்க.தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன் ~ என்றார் அவர்.                                                                         *

No comments:

Post a Comment