ஆய்வுலகில் பேய் எழுத்து
தமிழாய்வுகளின் தரச்சரிவு
பற்றிய குரல்கள் 1970களிலேயே எழுந்தன. கோ. கேசவனின் “மண்ணும் மனித உறவுகளும்“ நூல்
அணிந்துரையில் க. கைலாசபதி குறைபட்டுக் கொண்டிருந்தார். 1980களில் நான் முனைவர் பட்ட
ஆய்வு முடிந்ததற்கான பாராட்டு விழா ஏற்புரையில் போதாமையை – எனது போதாமையை, பட்டத்திற்கும்
ஆய்வறிவிற்குமான இடைவெளியை – சுட்டிக்காட்டித் தட்டச்சிலும் அதனை அவையோர்க்குத் தந்தேன்.
வெங்கடசாமிநாதன் ஒரு முறை தமிழக அரசியல் பண்பாட்டுப் போக்கு இதற்குமேல் சீரழிய முடியாத
அளவு தாழ்ந்துவிட்டது என்று கருதும்போதெல்லாம் அதற்கும் மேலாகத் தாழ்கிறது என்றெழுதினார்.
தமிழாய்வுலகின்
பேய் எழுத்துக்கு (Ghost Writing) சில வரலாற்றுப் படிநிலைகள் உண்டு. ஆய்வறியும் நுட்பமும்
உடைய அறிஞர் சிலர், பணிச்சுமை முதலியன காரணமாய்ப் பேய் எழுத்தை நாடினர். இது முதற்கட்டம்.
பின்பு அரைகுறை அறிஞர்கள்
குறைநிரப்பும் பொருட்டு, நிறைபுலமையுடைய பேய் எழுத்தாளரை நாடினர். இஃது அடுத்த கட்டம்.
அடுத்து ஏதுமறியாதார்,
அரைகுறை அறிவுடைய பேய் எழுத்தரை நாடினர்.
1990களில் ஏதுமறியா ஆய்வாளர்
ஏதுமறியாப் பேய் எழுத்தரை நாடியதை உடனிருந்து கண்டதன் விளைவாக என் “ஆய்ந்திறம்“ வெளிவந்தது.
சலபதி(பேராசிரியர் ஆ.இரா.
வேங்கடாசலபதி) தம், “அந்தக் காலத்தில் காப்பி இல்லை“எனும் நூலின் “தமிழில் பகடி இலக்கியம்“
என்னும் கட்டுரையில் ஆய்ந்திறத்தைப் பிரபலப்படுத்தினார்.
1995 ஏப்ரலில் “கரந்தைத்
தமிழ்ச் சங்க“ வெளியீடான “தமிழ்ப் பொழில்“ இதழில் “ஆய்ந்திறம்- முதற் பதிப்பு“ வெளியாயிற்று.
எனது “அடிவானம் நோக்கிச் சில அடிகள்“ எனும் நூலின் இரண்டாம் பதிப்பில்(2014) பின்னிணைப்பாகத்
தந்தேன். பதிப்பு முன்னுரையை அதில் காணலாம்; மூலத்தை மட்டும் வலைப்பூவில் அச்சிடுகிறேன்.
சிறப்புப் பாயிரம்
திருமால் வரை முதலாத் தென்குமரி யாயிடைப்
பலவாம்பல் கலைக்கழங் கல்லூரி தம்மோ
டளவிலார்; பயின்றிடவே யஞ்சல் வழிக்கல்வி
எனுமிவற்றாற் பட்டம் பெற்றார்; பலரவருள்
பணிபெறுதற் கிடையில்மேற் பட்டஞ் சிலபெறவும்
பணியிலுளார்; பதவியொடூ தியவுயர்;வு பெற்றிடவும்
பதிந்திடுவா ராராய்ச்சித் துறைகளிலே யன்னவர்;க்காய்க்
கண்ணுதலான் தருமிக்குக் காட்டிய நெறிமிகுத்து
மண்ணுலகின் மாநாடி யெனுந்தொகையு ளொன்றாக
விந்நூற்காய்த் திறமென்னு மினியபெயர்; தனைச்சூட்டித்
தந்தனன் றமிழாய்வு தழைத்திடப்
புளுகணிச் சித்தனெனும் புகழ்மிகு புலமையோனே.
நூல்
01. ஆய்வரே முயறலும் அடுத்தவர்; நாடலும்
ஆயிரு வழியவாம் ஆய்வுரை ஆக்கல்
02. தாமே எண்ணித் தலைப்புத் தேர்;ந்து
நூலகம் வல்லுநர்; களமிவை கண்டு
தொகுத்துத் தரவுகள் வகுத்து நூலாக்கல்
ஆய்வரே முயலும் வழியெனப் படுமே
03. அஃதிவண் நுவலா தடுத்தவர்; நாடி
ஆய்வுரை ஆக்கிடும் வகைநுவன் றிசினே
04. பல்கலைக் கழகப் பதிவொன்று கொண்டே
சொல்லவும் பெறுவர்; ஆய்வர்; எனச்சிலர்;
05. பதிந்தவர்; எனவிவர்ப் பகர்;தலே சரியாம்
06. அன்னவர்; தாமே அடுத்தவர்; நாடுவார்;
07. அடுத்தவ ரென்பா ரொப்பந்த மேற்றுக்
கொடுத்தவா றாய்வுரை முடிப்பவ ராவார்;
08. ஆய்நெறி யாளரே ஒப்பந்த மேற்றலும்
அடுத்தவ ரொருவரை யமர்;த்தித் தருதலும்
ஆய்வர்;க்கு வாய்த்திடும் ஆகூழ் என்ப.
09. ஒப்பந் தம்மே பகுதியும் ;முழுமையும்
எனவிரு பாற்படும் என்மனார்; தெரிந்தோர்;
10. பதிந்தவர்; தந்த தலைப்பிற் கேற்பப்
பல்வகைத் தகவல் திரட்டி எழுதலும்
அவர்தரு தரவுகள் அமைவுற வாக்கலும்
இயல்சில மட்டும் எழுதித் தருதலும்
பகுதியொப் பந்த முறையெனப் படுமே
11. முழுஒப் பந்த முறையது தானே
தலைப்பு முதலாத் தட்டச் சிட்டுக்
கட்டமைத் தாய்வுரை அளித்தல் ஈறா
அனைத்துப் பணியும் ஆற்றுத லாகும்
12. ஒப்பந் தப்பணி ஒப்பிய ஒருவர்
உள்ளொப் பந்தம் விடுதலும் உண்டு
13. ஒப்பந் தப்பணிக் காலங் காணின்
இயல்பும் விரைவும் எனவிரு வகைத்தாம்
14. ஒப்படைத் திடற்கு நெடுநாள் முன்பே
ஒப்பந் தஞ்சயெல் இயல்பா கும்மே
15. சின்னாள் முனர்ச்செயின் விரைவெனப் படுமே
16. ஆணையின் பின்னர்; ஆக்குத லன்றி
ஆயத்த ஆய்வுரை ஆக்குநர்; உளரே.
17. அவர்;தாம்
பக்க அளவினைப் பாங்குறப் பேணுவர்;
18. இளநிலைத் திட்டப் பணியுரை இரட்டல்
முதுநிலைக் காகும் அவ்வுரை இரட்டல்
மெய்யியல் முதுநிலைப் பட்ட ஆய்வுரை
அஃதோர்; ஈரரை அளவாய் இழுப்பின்
தகுமாம் முனைவர்; பட்டம் தனக்கே.
19. துறைதலைப் பொடுவகை காலமும் கருதித்
தொகையினைப் பேசித் தொடங்குவர்; பணியை.
20. தொடங்கையில் முன்தொகை முடிவினில் முழுத்தொகை
படிப்படி யாகத் தவணையாய்த் தருந்தொகை
முழுமையாய் முன்னரோ பின்னரோ தருந்தொகை
எனத்தொகை தருதல் பல்வகை யாமே
21. பரிந்துரை பேரம் எனுமிவ் வாற்றான்
குறித்த தொகையினைக் குறைத்தலும் உண்டு.
22. நட்புப் பதவிசெல் வாக்கொடு நாடின்
ஒப்பந் தத்தொகை தவிர்;க்கவும் கூடும்.
23. ஆய்வுரை அடுத்தவர்; ஆக்கலாம் ஆய்வரே
வாய்மொழித் தேர்;வினுக் குரியவர்; ஆதலின்
அவ்வுரை ஒருமுறை படித்திடல் நன்றாம்.
24. வாய்க்கு மாயின் தேர்;வரை ;நாடி
உற்றுழி யுதவி உறுபொருள் கொடுத்தல்
அதனினும் நன்றெனச் சிலர்;நவின் றிடுவர்;
25. முந்தையோ ராய்வுரை தம்பெய
ரிட்டுத்
தந்திடும் துணிவு விஞ்சிய முறைதான்
அகப்பொருட் களவுகொள் அருந்தமிழ் நெறிபோல்
புலத்துறைக் களவாம் புதுவதன் றாயினும்
அழுக்கா றுடைச்சில வறிஞர்; காணின்
இழுக்கெனக் கூறி யிகழ்வதோ டன்றிச்
சட்டம் பேசிப் பட்டமும் தடுப்பர்;.
26. ஆதலின்
பதிந்தவர் யாவரும் பாதுகாப் புடனே
பற்றிடத் தக்கதிவ் ஆய்ந்திற நெறியே.
புறனடை
27. நாமே பல்கலைக் கழகம் நாடி
எழுதியோ எழுதுவித் தோபெற லன்றிப்
பல்கலைக் கழகம் தாமே வந்து
பற்பல மதிப்பியற் பட்டம் நல்கல்
அரசியல் திறமஃ தாய்ந்திறப் புறனடை.
*******
இப்போது என் “ஆய்ந்திறம்“
காலாவதியாகிவிட்டது. “தமிழாய்வாளர்கள்“ தாமே எதை எழுதினாலும் பட்டம் வாங்கிவிடலாம்
என்கிற நிலை வந்துவிட்டது. எனவே அரைகுறைப் பேய்களுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.
ஒரு சான்றை என் முகநூலில் (Mathivanan Balasundaram) பதிவுசெய்துள்ளேன். தொடர்புடைய
விவாதங்களையும் அதில் காணலாம். சான்றை மட்டும் இங்குத் தருகிறேன்.
No comments:
Post a Comment