Sunday, 18 October 2015

பால் மாடு, மாட்டுப்பால்

                                                        நான் மாட்டிறைச்சி பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. தமிழ் நாட்டில் இப்பொதைக்கு மாட்டிறைச்சி விவகாரத்தால் உயிர் போய்விடாது என்றே கருதுகிறேன். கொஞ்சம் துணிந்து சொல்லலாம்தான்.என்றாலும் எதற்கு வம்பு!      
                                                                 கவிஞர் மகுடேசுவரனின் `மொழித்திறம்` என்னும் நூல் `தமிழ் அறிவோம்` நூல் வரிசையில் முதலாவதாக வந்துள்ளது.தமிழ் மொழிப் பயிற்சி கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் –குற்றுயிரும் குலையுயிருமாக- இறுதியை எட்டிக்கொண்டிருக்கிறது.தமிழ் உயர்கல்வித்துறைகளில் தமிழின்  நிலை மிகவும் பரிதாபமாகிவருகிறது;ஆராய்ச்சித்துறைகளில்,மிக மிக மோசம்,மிக மோசம்,மோசம்,சுமார் எனும் நான்கு வகைகளில் ஆய்வேடுகளை அடக்கி விடலாம்.இந்நான்கிலும் அடங்காத தரமான ஆய்வேடுகளை விதி விலக்காகக் கொள்ளலாம்.                                                        `சரி, மகுடேசுவரன் நூலுக்கும் மேலே உள்ள புலம்பலுக்கும் என்னதொடர்பு?`                                                                   மெல்லக்கூட அல்ல விரைந்து தமிழ் சாகுமோ என்றஎண்ணத்தைச் சாகடிக்கும் நம்பிக்கையைத் தரும் நூல்களில் ஒன்று இது.                          மகுடேசுவரன் சொற்களையும் தொடர்களையும் இலக்கண நுட்பங்களையும்  அனாயாசமாக இந்த நூலில் அலசுவதைப் பார்க்கும்போது,தமிழ்த்துறைகளின் சித்திரவதையையும் மீறித்தமிழ் வாழும் என்று நம்பத்தோன்றுகிறது.                                                அவர் இணையத்திலும் புதிய தலைமுறை இதழிலும் எழுதியவற்றின் தொகுப்பே இந்நூல் .ஒவ்வொரு கட்டுரையும் சுவையும் செறிவும் கொண்ட்தாக,நூலை எடுத்தால் முடிக்காமல் மூட முடியாத அளவுக்கு வண்ண வண்ண வகைமை வளம் மிக்கதாகப் படிப்பவரைத் தொடர்ந்து வசப்படுத்திக்கொள்கின்றன.                                                      முதல் கட்டுரை, திரும்பத் திரும்ப நிழ்வனவற்றுள் ஒற்றைத்தனி நிகழ்வு குறித்து வழங்கும் தடவை,தபா,வாட்டி,விசுக்கா ஆகிய சொற்களின் வளம் பேசுகிறது.                                                                         `கால்வாயா?வாய்க்காலா?` என்னும் கட்டுரை ஒன்று போல் தோன்றும் இரு தொடர்களின் நுட்ப வேறுபாட்டை விவாதிக்கிறது.இதைப் புரிய வைப்பதற்கு மகுடேசுவரன் அவ்ற்றுக்கிணையான தொடர்களாகப் பால் மாடு, மட்டுப்பால் ஆகியவற்றை எடுத்துக் காட்டும்போது அவரது ஆசிரியத் திறன் புலப்படுகிறது.முன்னதில் மாடு என்பதில் பொருள் நிலை பெறுகிறது.பின்னதில் பால் என்பதில் பொருள் நிலை பெறுகிறது.பால் சுரக்கும் மாடு,மாட்டினது பால் என்று இவற்றுக்குப் பொருள்.                       அவ்வாறே கால்வாய் என்பதில் வாயிலும் வாய்க்கால் என்பதில் காலிலும் பொருள் நிலை பெறுவதை மகுடேசுவரன் விளக்கியுள்ளார்.                                                   மரபிலக்கணங்களும் முன்மொழி நிலையல்,பின்மொழி நிலையல்,இருமொழி மேலும் ஒருங்கு நிலையல்,அன்மொழி நிலையல் (இங்கு மொழி=சொல்) என்றெல்லாம் பேசியுள்ளன.                                   மகுடேசுவரனும் ஆங்காங்கே இலக்கணக்கலைச்சொற்களைக் கையாள்வது மகிழ்ச்சியளிக்கிறது.                                                              வினைத்தொகை என்றே ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள் இன்னும் ஊறுகாயை மட்டுமே தொட்டுக் கொள்கிறார்கள். அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை.பாட நூலில் இல்லாத எடுத்துக் காட்டு சரியானதாக இருந்தாலும் விடைக்குறிப்பில் இல்லையென்றால் மதிப்பெண் இல்லை.வாதிட்டு நிறுவும் வாய்ப்போ,இலக்கண அறிவோ ,இரண்டுமோ இல்லாமல் என்னதான் செய்ய முடியும்~விதியே விதியே~ என்று பாரதியின் அங்கலாய்ப்பை இரவல் வாங்கிப் புலம்புவதைத் தவிர? போகட்டும்.                          எரிமலை,இடுகாடு,சுடுசோறு,சுழல்கோபை,சூழ்நிலை,வளர்பிறை,தேய்பிறை,நடுகல்,மூடுபனி,விடுமுறை,வெடிகுண்டு என்று வினைத்தொகைகளை அடுக்குகிறார் மகுடேசுவரன்.                                         விவாதத்திற்குரிய இடங்கள் சில இல்லாமல் இல்லை.அ றிணைப் பலர்பால் என ஒன்றில்லை .பலவின் பால்என்றிருக்க வேண்டும்.வாழ்த்து என்பது முதல் நிலைத்தொழில் பெயர் என்கிறார்.அது தொழிற்பெயர்.வாழ் என்பதுதான் முதல் நிலை/பகுதி.                                                என்றாலும்,தமிழாசிரியர்களே பேசாத,பேசத்துணியாத மொழி,இலக்கண நுட்பங்களைப் பேசத் தொடங்கியிருக்கும் மகுடேசுவரனின் முயற்சியை,இதில் அவர் தொட்டுக்காட்டும் நுட்பங்களைத் தமிழார்வமுடைய அனைவரும் போற்றிப் படிக்கவேண்டும்.(தமிழினி வெளியீடு).


5 comments:

  1. அஃறிணைப் பலர்பால் என்பது அச்சுப் பிழைதான். அதே நேரத்தில் வாழ்த்து என்பது ‘வாழ்த்துவாயாக’ என்னும் ஏவல்பொருள்தரும் வினையடியாகப் பயன்படுவதைத் தங்கள் பார்வைக்குக் கொணர விரும்புகிறேன். வாழ்கிறான் வேறு, வாழ்த்துகிறான் வேறு என்பதால். அதன்படி சொன்னதுதான் வாழ்த்து என்பது முதல்நிலைத் தொழிற்பெயர் என்பது. தங்கள் நல்லுரைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க.விவாதத்திற்குரியன என்றேனேயன்றிப் பிழை என்று சொல்லவில்லை.வாழ், வாழ்த்து -இரண்டும் வெவேறு வினையடிகள் என்னும் தங்கள் கருத்து சிந்தனயைத் தூண்டுகிறது. தொடர்வோம் .நன்றி.-மதிவாணன்.

      Delete
    2. மன்னிக்க.விவாதத்திற்குரியன என்றேனேயன்றிப் பிழை என்று சொல்லவில்லை.வாழ், வாழ்த்து -இரண்டும் வெவேறு வினையடிகள் என்னும் தங்கள் கருத்து சிந்தனயைத் தூண்டுகிறது. தொடர்வோம் .நன்றி.-மதிவாணன்.

      Delete
    3. மன்னிக்க.விவாதத்திற்குரியன என்றேனேயன்றிப் பிழை என்று சொல்லவில்லை.வாழ், வாழ்த்து -இரண்டும் வெவேறு வினையடிகள் என்னும் தங்கள் கருத்து சிந்தனயைத் தூண்டுகிறது. தொடர்வோம் .நன்றி.-மதிவாணன்.

      Delete
    4. மன்னிக்க.விவாதத்திற்குரியன என்றேனேயன்றிப் பிழை என்று சொல்லவில்லை.வாழ், வாழ்த்து -இரண்டும் வெவேறு வினையடிகள் என்னும் தங்கள் கருத்து சிந்தனயைத் தூண்டுகிறது. தொடர்வோம் .நன்றி.-மதிவாணன்.

      Delete