Monday, 19 October 2015

கூத்தாடிரெண்டுபட்டால்..

  கூத்தாடிரெண்டுபட்டால்...                                                        ஏறத்தாழக் கடந்த இரண்டு மாதங்களாகக் `கூத்தாடி ரெண்டு பட்டால்` என்னவாகும்? என்று பார்க்க முடிந்தது. ஆனால், கூத்தாடிகளுக்குத்தான் தொக்கு. ஆமாம் தமிழ் மக்களின் கதி அது தான். "என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்..." என்று தொடங்கி , இறுதியில் படக்கலைதான் வாராதா என ஏங்கிய பாரதிதாசன் `படக்கலை`யாம்  சனி ஒழிந்தால் போதும் –என்ற முடிவுக்கு அப்போதே வந்துவிட்டார். சோதிடர்கள்கூடத் தனி மனிதர்களுக்கு ஏழரை ஆட்டைச்சனிதான் பிடிக்கும் என்பார்கள். (அதாவது ஏழரை ஆண்டுகளுக்கு ஒருவரைப் பிடித்தாட்டும் சனி. அது வழக்கில் ஏழரை நாட்டுச்சனி என்று மருவி விட்டது) ஆனால் தமிழ்ச்சமூகத்தையே பிடித்தாட்டும் வாழ்நாட்சனியாகிவிட்டதுதிரைப்படம். 
     


 திரைப்படம் என்பது நவீன அறிவியலின் விளைவுகளுள் ஒன்று. அது கூட்டு முயற்சியில் பரிணமிக்கும் புதிய கலை. பெரிதும் காமிராவை, அதன் இயக்கத்தைச் சார்ந்தது. ஒளிக்குச் சார்பாக ஒலி சற்றே உள்ளடங்கி இயக்குநரின் கலைக்கண்களால் ஒருங்கிணைக்கப்படுவது.(இங்கே தொல்காப்பியத்தைத் துணைக்கழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது)`கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்குரியது`.அதாவது கண்ணுக்கு முதலிடம்,செவிக்கு அடுத்த இடம். 
      புராண இதிகாச நாட்டுப்புறக்கதைகளை உச்சஸ்தாயியில் பாடி நடித்த மரபும் பார்சி நாடக வருகையும் கூடி முயங்கிய தொடக்க காலத்தமிழ்ப் படக்கதை பற்றிப் பாரதிதாசன்` பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார், பதிவிரதைக்கின்னல் வரும் பழையபடி தீரும் என்ற வாய்பாட்டைப் பாடி நகையாடினார்.                                          திருப்புமுனையாக வந்த சமூகப் படங்கள் வசனப்பேரிரைச்சல்களால் வென்றன.வண்ணப் படக்காலம் மசாலாக்களால் நிறம்பிற்று.விலக்காக வந்த படங்கள் விதியை உறுதி செய்தன.ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலத் தமிழக அரசியலின் தலை விதியையும் வசன இரைச்சல்,வணிக மசாலாத் திரைத்துறையே தீர்மானித்தது; தீர்மானிக்கிறது.                                                              மதுவின் போதையை ஒரு வேளை விலக்கின் மூலம் கட்டுப்படுத்தலாம்.திரைப் போதையைக் கட்டுப்படுத்த முடியுமா? மது விலக்குப் பிரச்சாரப் பாடலொன்றை என்.எஸ்.கிருஷ்ணன்,'குடிச்சுப் பழகணும்' என்று அதிர்ச்சியூட்டித் தொடங்குவார்.`நீராகாரத்தக் குடிச்சுப் பழகணும்` என்று மதுவுக்கு மாற்றாக நீராகாரத்தைச் சொல்லித் தொடர்வார். 1970களில் நாங்கள் `திரைப்படச்சங்கம்`தொடங்கவும் படங்கள் திரையிட புரொஜக்டர் வாடகைக்கு எடுக்கவும் அல்லது ஒரு காட்சிக்கு அரங்கம் பிடிக்கவும்  அஞ்சலட்டை மூலம் உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் சங்கப் பதிவுச் சட்டப்படி முறையாகச் செயற்குழு பொதுக்குழு கூட்டவும் பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்லை. இவ்வளவையும் ஒருங்கிணைக்க முடியாமல் சங்கம் இடைக்கண் முறிந்தது.                       சகல சக்திகளோடும் இடை விடாமல் சுழன்றடித்த தமிழ்த்திரைச் சூறாவளியைக் குடை கொண்டு தடுக்கும் துணிவன்றி வேறில்லை. இப்போது அப்படியில்லை. உலகத்திரைப் படங்களை உள் வீட்டிலிருந்தே பார்க்கலாம்.சிறிய குழுக்களாகவாவது ஒன்றாகப் பார்த்து விவாதிக்கலாம். -கலைப்படம்,உலக சினிமா என்றெல்லாம் கூட அலட்ட வேண்டியதில்லை. எந்த வகைப்படமானாலும் திரைப்பொறுப்போடு எடுக்கப்பட்டிருந்தால் போதும்.மீளலாம்.                                                          தமிழ்த்திரைக் கூத்தாடிகள் ரெண்டு பட்டு மோதிக்கொண்டதை அவ்வப்போது வேடிக்கையுறக் கண்டு நகைத்தேன். கொஞ்சம் ஆர்வம் மேலிட சின்னத்திரை முன் அமர்ந்ததும் உண்டுதான். நானும் தமிழன்தானே!         தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதைத் தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைக்கெதிராக நமது உலக நாயகன் ஏன் குறுகியநோக்கில் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றச் சொல்கிறார்?                   
http://photos1.blogger.com/img/189/2303/400/picverybadthings.jpg

                                               

 உலகத்திரைச் சிந்தனையாளரல்லவா அவர்? மாமனிதர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள்! அவ்வை சண்முகி போல, மிசஸ்.டவுட் பயர்;த்னாலி போல வாட் அபோவ்ட் பாப்;விருமாண்டி போல ரோஷமான்... ... அடுக்கிக்கொண்டே போகலாம். http://jackofall.blogspot.in/2005/03/inspired-kamal-hassan.html
நம் லோக் நாயக்ஜி (உலக நாயகன் அவர்கள் என்பதன் ஹிந்திய வடிவம் ) படங்களைப் பார்த்த பிறகுதான் ஒத்த ஆங்கில, ஜப்பானியப் படங்களைப் பார்த்தேன் . எனவே , என்னைப் பொறுத்த வரை 'லோக் நாயக்ஜி'தான் முன்னோடி. எனவே , 'உலக நடிகர் சங்கம்'  என்பதையும் கடந்து பிரபஞ்ச் நாயக்ஜி யாக உயர்ந்து பிரபஞ்ச நடிகர் சங்கம் என்று பெயர் சூட்டுவதுதான் நாயக்ஜீயின் பரந்த நோக்குக்கு உகந்ததயிருக்கும் .
              குறுகிய தமிழ்க் கும்பல்களுக்காக இனிப் படம் எடுக்காமல் பிரபஞ்சப் படங்களை அவர் எடுக்க வேண்டும். ஒரு வேளை தமிழ்க்  குறுங்கும்பல்  எதிர்க்குமானால் 'பரந்த மனம் கொண்ட கர்நாடகத்தில் தஞ்சம் புகுவேன்' என்று அறிக்கை விடலாம் என்பது இந்தக் குண்டுச்சட்டிக் குதிரையின் அன்பான வேண்டுகோள்.

1 comment: