தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் முனைவர் பா. மதிவாணன் எழுதிய அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை நூல்களை வெளியிட, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழியல் துறைத் தலைவர் மா. இராமலிங்கம் முதற்படியை பெற்றுக் கொண்டார்.
விழாவில் கவிஞர் நா. முத்துநிலவன் பேசியது: அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் ஆகிய நூல்கள் எழுதிய முனைவர் பா. மதிவாணனின் தந்தை சு. பாலசுந்தரத்தை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ச. பாலசுந்தரம் சங்கத் தமிழ் இலக்கியத்தை பின்பற்றியவர். அவரது மகன் மதிவாணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உள்ளார். மதிவாணன் நூல்களில் சமூக பார்வை உள்ளதை பார்க்க முடிகிறது என்றார். விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. திருமலை பேசியது:
மதிவாணன் புத்தகத்தில் தேசிய பார்வை, பொதுவுடைமை சிந்தனை உள்ளது. அவரது கட்டுரைகளில் இலக்கியங்களை வரலாற்றுப் பார்வையில் பார்க்கும் முறை நடைபெற்றுள்ளது என்றார்.
நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு மதுரை செந்தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர் அ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்களின் ஆசிரியர் பா. மதிவாணன் ஏற்புரை நிகழ்த்தினார்.இதில் சேக்கிழார் அடிபொடி டி.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-தினமணி 03/08/2014 (தஞ்சைப் பதிப்பு)
No comments:
Post a Comment