Wednesday, 2 July 2014

குறள் உரைச் ‘சிற்பி‘


தமிழ்ச் சமூகத்தில் திருக்குறளின் பயன்பாட்டு மதிப்பை விடப் பண்பாட்டு மதிப்பே மேலோங்கியிருக்கிறது.
     ‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்புஎனத் திருக்குறளாக்க முறைமையைத் தொகுத்துச் சொல்கிறார் பரிமேலழகர்     (குறள் : 322 உரை).

     திருக்குறளின் வடிவச் செறிவும் நயமும் காரணமாக எடுத்தாள வாய்ப்பாய் அமைந்திருப்பதும் அதன் செல்வாக்கிற்குக் காரணம்.
     மேற்குறித்த காரணங்களால் திருக்குறளுக்கு எண்ணற்றோர் உரை எழுதினர்; எழுதுகின்றனர்; எழுதுவர்இவ்வுரையாசிரியர் வரிசையில் கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியம் (சிற்பி) அவர்களும் அண்மையில் (அக்டோபர் 2012) இடம் பெற்றுள்ளார்.
     பரிமேலழகர், .சுப. மாணிக்கம், தமிழண்ணல், ஜெ. நாராயணசாமி, கு.. ஆனந்தன், எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரைத் தழுவி மணக்குடவரின் இயல் பகுப்பு முறையைப் பின்பற்றி, பழகு தமிழில் இயன்ற இவ்வுரையில் சில இடங்களில் மட்டும் மரபுரைகளிலிருந்து மாறுபட்டு உரைத்திருப்பதாகக் கூறும் சிற்பி எடுத்துக் காட்டாக ஊழ் என்பதற்குஇயற்கை ஆற்றல்எனப் பொருள் தந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் (. xiii).
ஊழ் - சொல்லும் பொருளும்
     பரிமேலழகர் ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி என்பர் (ஊழியல் முன்னுரை).  இவை ஒரு பொருளவாய் ஆளப்படினும் முற்றிலும் ஒரே பொருளன அல்லஎல்லாச் சூழல்களிலும் ஒன்றன் இடத்தைப் பிறிதொரு சொல்லால் மாற்றீடு செய்ய இயலாதுஇவற்றுள் ஏதேனும் ஒரு சொல்லுக்கே சமயம்/கொள்கை சார்ந்து வெவ்வேறு பொருள் காணவும் இடமுண்டு.
     ஊழ்(த்தல்)- எனும் வினைப் பகுதிக்கு முதிர்தல், பதனழிதல், மலர்தல் எனவும் ஊழ் எனும் பெயர்ச் சொல்லுக்குப் பழமை, பழவினை, முதிர்வு, முடிவு, பகை மலர்ச்சி, சூரியன் எனவும் பொருள்கள் தருகிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).  இவற்றுள் முறை என்பதன் பொருள்களுள் ஒன்றாகNature;  தன்மைஎன்பதைத் தருகிறது அவ்வகராதிஊழ் = முறை = தன்மை எனும் பொருள் நீட்சியில் இயற்கை ஆற்றல் என்பதற்கும் இடமில்லாமல் போகாது.
இயற்கை - ஆட்சியும் பொருளும் :
     “இருவேறுலகத் தியற்கை” (374) எனும் தொடரால் ஊழை இயற்கையெனல் வள்ளுவர்க்கும் உடன்பாடானதேயென்று ஒருவாறு கருதலாம்.
     “உலகத்துப் போக்கில்என அத்தொடருக்குச் சிற்பி உரை வரைதல் கொண்டு இயற்கை என்பதற்குப் போக்கு எனப் பொருள் கண்டமை தெளியலாம்.
      உலகம் எனும் சொல்லுக்கே ‘(மனித) வாழ்க்கையின் போக்கு, நடப்பு ; Ways of Worldஎனத் தற்காலத் தமிழ் அகராதி பொருள் தருகிறது.  ‘உலகத்தியற்கைஎன்பதற்குத் தற்காலத் தமிழ் சார்ந்துஉலகத்துப் போக்குஎனப் பொருள் காண்பது பழகு தமிழ்ப் பாங்காகும்.
ஊழ் - ஆட்சியும் பொருளும்
     ‘ஊழ்அதிகாரத்தில் மூன்று பாக்களில் மட்டும் - ஒன்றில் தனித்தும் இரண்டில் அடையடுத்தும் - ஊழ் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
     ‘ஊழ்= இயற்கையின் முறைமை (380), ‘ஆகூழ்=  இயற்கை(யின்) ஆக்க சக்தி, ‘போகூழ்’ - இயற்கை(யின்) அழிவுச் சக்தி (371), ‘இழவூழ்- இழப்புச் சூழல், ‘ஆகல் ஊழ்-  ஆக்கச் சூழல் (372) எனச் சிற்பி பொருள் கண்டுள்ளார்.
     இயற்கை ஆக்க சக்தியாக (ஆற்றலாக) உதவுதலும் அழிவுச் சக்தியாக ஊறு செய்தலும் எனும் நிலையில் ஊழ் இயற்கையாற்றலைக் குறிக்கிறது.
     இழப்புச் சூழல், ஆக்கச் சூழல் எனப் பொருள் தருமிடங்களில் சூழலானது அவ்வக் காலப் போக்கைக் குறிப்பது எனலாம்.
     சூழல் என்பதற்குத்தனிமனிதர்களிடமும் குழுக்களிடமும் சிலவகையான போக்குகள், பாதிப்புகள் உருவாவதற்குக் காரணமான அம்சங்கள் கொண்ட நிலைமை  ‘Conditions‘  என்றொரு பொருள் விளக்குகிறது தற்காலத் தமிழ் அகராதிஇதில் போக்குகள் எனும் சொல் பயன்படுவது கருதற்குரியதுசிற்பிஉலகத்தியற்கைஎன்பதற்குஉலகத்துப் போக்கு எனப் பொருள் கொண்டதன் பொருத்தம் உணரலாம்.
உண்மைஆட்சியும் பொருளும்
     “உண்மை அறிவு” (373) எனும் தொடருக்குஇயற்கை தந்த அறிவுஎனப் பொருள் கண்டுள்ளார் சிற்பிஇக்குறளின்நுண்ணிய நூல் பலஎனும் தொடருக்குகூர்மையான அறிவைத் தரும் பல நூல்களைஎனும் பொருள் தந்து இயைபாகஇயற்கை தந்தஎனும் தொடரை ஆண்டுள்ளார்இது நடைநயம் கருதிய ஆட்சிஇயற்கையாய்/இயல்பாய் அமைந்த அறிவு எனல் சாலும்.
     மணக்குடவர்தனக்கு இயல்பாகிய அறிவுஎன்பர்குறளில் உள்ளதன்என்பது சிற்பி உரையில் விடுபட்டுள்ளதுபண்டை உரையாசிரியர் சிலரும் அதனை விடுத்து உரை கண்டுள்ளனர்.
     உண்மையாவது (உள் + மை) உள்ளார்ந்த தன்மை/உளதாந்தன்மை யாகும்உண்மையறிவு என்பதை மை விகுதி கெடாமல் ஆகிய எனும் பண்புருபு தொக்க தொடராகக் கொள்ளலாம்.
     பரிமேலழகர் பதவுரையில்தன் ஊழானாகிய பேதைமையுணர்வுஎன மூன்றாம் வேற்றுமை விரித்துப் பொருள் கூறி, விளக்கத்தில் “…. செயற்கையானாகிய அறிவையும் கீழ்ப்படுத்தும்என்பதை நோக்கக் கல்வியறிவு செயற்கையறிவென்றும், ஊழானாகிய அறிவு இயற்கையறிவென்றும் கருதியிருப்பதை உணரலாம்இதனால் ஊழை இயற்கை எனல் பரிமேழலகர்க்கும் உடன்பாடாகக் கொள்ளலாம்.
பால் - ஆட்சியும் பொருளும்
     ‘பாலல்ல’ (376), ‘பால’ (378) என்பன முறையே எதிர்மறைக் குறிப்பு வினையாலனையும் பெயராகவும், குறிப்பு வினையாலனையும் பெயராகவும் இடம்பெற்றுள்ளன.
     ‘உறற் பால’ (378) என்பதற்குவந்துறுந் துன்பப் பகுதி’ (மணக்குடவர்), ‘வந்து எய்தற் பாங்கானவை’ (காளிங்கர்), உறுதற் பால வாய துன்பங்களை’ (பரிமேலழகர்) என்றெல்லாம் பழைய உரையாசிரியர்கள் கண்ட பொருள்களை நோக்கின் அவர்கள்பால்என்பதற்கு ஊழ் என நேர்ப் பொருள் தராமை புலனாகிறது.
     சிற்பி பால் என்பதற்கு முறை எனப் பொருள் கண்டிருப்பதாகப் படுகிறதுமயங்குநிலைத் தொடரலாமைந்த அக்குறட்பா பொருள் கோடற்கு அரிதானது; மேலும் ஆராய வேண்டியது; விரிவு கருதி இங்கு விடப்படுகிறது.
     ‘பாலல்ல’ (376) எனும் தொடருக்குத்தமக்குக் பொருந்தாதனஎனச் சிற்பி பொருள் காண்கிறார;.  பெரும்பாலான பண்டை உரையாசிரியரும் பின்னோரும்ஊழ்எனப் பொருள் கொண்டமை சுட்டி அப்பொருளே இயைபுடைத் தென்கிறார் திருக்குறள் உரைக் களஞ்சிய ஆசிரியர் . தண்டபாணி தேசிகர்.
கால் - ஆட்சியும் பொருளும்
     நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
     அல்லற் படுவ தெவன் (379)
எனும் குறளுக்குநன்மை நேர்கையில் வகை பூணுவோர் தீமை விளையும் போது துயரம் கொள்வது ஏன்? (இரண்டும் இயற்கை எனச் சமநிலையில் கருத வேண்டும்) என அடைப்பினுள் விளக்கம் தரும் போதுஇயற்கைஎனும் சொல்லை ஆள்கிறார் சிற்பி.
     நன்றாங்கால் - நன்மை நேர்கையில், அன்றாங்கால் - தீமை விளையும் போதுஎனக் கால் என்பதற்கு - இல், - போது என வெவ்வேறு பொருள் தருவது நடை கருதியதாகலாம்இவ்வுரையில் கால் என்பது காலப்பொருளில் (போது) கொள்ளப்பட்டுள்ளதுஅதாவது காலச் சூழலைக் குறித்து நிற்கின்றதுஇழவூழ் ஆகலூழ் - என்பவற்றிற்குக் கூறப்பட்டுள்ள இழப்புச்சூழல் , ஆக்கச் சூழல் என்பன இக்குறட்பொருளோடியைத்தவை யாகும்.

ஊழ் இழையோடும் உரை

     நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
     நல்லவாம் செல்வம் செயற்கு (375)
எனும் குறளுக்கு அதிகாரம் கருதாமல்செல்வம் சேர்க்க முற்படும் போது நல்வழி பயனற்றுப் போவதும் உண்டுதீயவழி வெற்றி தருவதும் உண்டுஇது குறித்து எச்சரிக்கை வேண்டும்எனப் பொதுப் பொருள் காண்கிறார் சிற்பிஉரையின் இறுதி வாக்கியத்திற்குக் குறளில் இடமில்லை.
     வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
     தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)
 எனும் குறளுக்கு, “அறநெறி வகுத்த சான்றோர் நெறியில் வாழ்வை அமைத்துக் கொள்ளா விட்டால், பொருள் ஈட்டுபவன் கோடி தொகுத்தாலும் துய்க்க முடியாமல் போவதுண்டுஎனும் பொருள் தருகிறார் சிற்பி.
     ‘வகுத்தான்எனும் ஒருமைக்குச் சான்றோர் எனப் பன்மையிலும்தொகுத்தார்எனும் பன்மைக்குப் பொருள் ஈட்டுபவன் என ஒருமையிலும் பொருள் கண்டிருப்பதன் காரணம் புலப்படுமாறில்லை.

முடிபு:
     “ஊழ்என்பதற்குஇயற்கை ஆற்றல்’ ‘சூழல்’, ‘போக்குஎனச் சிற்பி பொருள் கண்டிருப்பது மரபுஉரைகளிலிருந்து மாறுபட்டதேயன்றி, மரபுக்கு மாறுபட்டதன்றுவள்ளுவரேஇயற்கை’ (374) என்பதைஊழ்;’ எனும் பொருளில் ஆண்டிருக்க வாய்ப்புள்ளதுபரிமேழலகர்க்கும் இதில் உடன்பாடிருத்தலை உய்த்துணர முடிகிறது.
     அமைப்பியம், பின்னமைப்பியம், பின்நவீனவியங்களின் பேரால் ஒரு பனுவலுக்கு (Text) முற்றிலும் புதிய புதிய ஏறுமாறான பொருள்களையோ விளக்கத்தையோ மனம்போனவாறு தர முற்பட்ட முயற்சிகளைப் பற்றி விவாதித்து,
      “அடிப்படையில் மொழி ஒரு தொடர்பாடல் சாதனம். மொழிக் குறிகள் முடிவற்ற பொருள்     விளக்கத்துக்குரியவை எனின் மொழி மூலமான தொடர்பாடல் சாத்தியமல்ல.மொழியினால்    கட்டமைக்கப்படும் ஒவ்வொரு பிரதியும் தொடர்பாடல் குணாம்சத்தைக் கொண்டுள்ளது.   ஆகவே வாசகன் தனக்கான அர்த்தத்தைப் பிரதிக்குக் கொடுக்கின்றான் என்பதுமுற்றிலும் உண்மையல்லபிரதி ஒரு வெற்றுத்தாள் அல்ல. ஒன்றுக்கு அதிகமான விளக்கத்துக்குரிய சாத்தியப்பாடு அதற்குள் அமைந்திருக்கிறது. எனினும் அது முடிவிலிஅல்ல (.214)“
என்கிறார்  எம்..நுஃமான்.
     எனவே சிற்பி திருக்குறள் உரையில் பழகுதமிழில் தேவைக்கேற்ப மரபுரைகளை ஏற்று, மரபுரைகளிலிருந்து மாறுபடும் போதும் எல்லை மீறாமல் பொருள் கண்டுள்ளார் என்பதற்கு ஊழ் அதிகாரக் குறள்கள் சிவற்றின் உரைப்பகுதிகள் சான்றாகின்றன.
நூற்பட்டியல்
 சிற்பி பாலசுப்பிரமணியம் (உரையாசிரியர்), 2012, திருக்குறள், பாவை பப்ளிகேஷன்ஸ் (பி)   லிட், சென்னை.

 தற்காலத் தமிழ் அகராதி 2008, க்ரியா, சென்னை.
 திருக்குறள் உரைக் களஞ்சியம் (துறவறவியல் - ஊழியல்)1986, மதுரை காமராசர்    
 பல்கலைக்கழகம், மதுரை.

 நுஃமான், எம்.., 2006, மொழியும் இலக்கியமும், காலச் சுவடு, நாகர் கோவில்.
  TAMIL LEXICON (VOL.I), 1982, University of Madras, Chennai.
                                                                                 பா. மதிவாணன்

4 comments:

  1. அய்யா,
    வணக்கம். உங்களுக்கே உரிய பாணியில் உள்ள நூல்மதிப்பீடு.
    நூலை முழுமையாகப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டும் பதிவினை இட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. ‘வகுத்தான்’ எனும் ஒருமைக்குச் சான்றோர் எனப் பன்மையிலும் ‘தொகுத்தார்’ எனும் பன்மைக்குப் பொருள் ஈட்டுபவன் என ஒருமையிலும் பொருள் கண்டிருப்பதன் காரணம் புலப்படுமாறில்லை.- ஏன் புலப்படுமாறில்லை? சற்றே ஆழ்ந்து -சமூகப் படைப்பு நோக்கில்- பார்த்தால் எளிதாகப் புரிகிறதே? ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் இலக்கண மருங்கிற் சொல்லாவிடினும் உரைநடை வழக்கு வடிவிற் சொல்லலாமல்லவா? நிற்க. தங்களின் அரிய நூல் அறிமுகமே சிறந்த ஆய்வுரையாகவும் திகழ்கிறது. வேறொன்றுமில்லை நான் வேண்டுவது...தொடர்ந்து எழுதுங்கள் அய்யா.. என்பதைத்தான்.. இதுவும் நிற்க. வள்ளுவர் கடவுள் எனும் சொல்லை ஆளவில்லையே தவிர அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, எனில் ஊழ் நம்பிக்கையும் இருப்பது இயல்புதானே? பெண்வழிச் சேறல் எழுதியவர்தான். (901-910) வரைவின் மகளிர் அதிகாரத்தையம் எழுதினார், இதில் ஆய்வுகள் எத்தனை வரினும் “ஆழ்ந்திருக்கும் கவியுளம்” கண்டு அதில் நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு? தொடர்ந்து சிந்திப்போம் அய்யா.

    ReplyDelete
  3. அய்யா தங்களின் அரிய வலைப்பக்கத்தை எனது நட்பு வலைப்பக்கப் பட்டியலில் சேர்ததிருக்கிறேன்... ஆர்வமுள்ளவர்கள் பார்க்க வருவர். தங்களைத் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். (தொடர் வெளியூர் நிகழ்வுகள் காரணமாகத் தாமதமாகவே தங்கள் பதிவைப் பார்த்தேன்)

    ReplyDelete

  4. வணக்கம்!

    கனிபோல் கமழ்கின்ற கன்னல் மலா்போல்
    இனிதுஇனிது உன்றன் எழுத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete