Wednesday, 2 July 2014

ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம்!



நூலைப்படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி – என்பார் பாரதிதாசன்.
 இரசிகமணி டி.கே.சி.யோ சங்கப்பாட்டுகள் சங்கடப் பாட்டுகள் என்று ஒதுக்குவார்.  ‘தொடங்கையில் வருந்தும்படி இருக்கும்’ என்று பாரதிதாசனும் சங்கடத்தை ஒத்துக் கொண்டாலும் ஊன்றிப்படித்தால் அடங்கா இன்பம் என்கிறார்.
     எப்படியானாலும் கிடைத்திருக்கிற தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தால் மூத்ததும்விரிந்த பரப்புடையதுமாகிய சங்க இலக்கியங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
     ‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பனின் சற்றே மிகைப்பட்ட கவிக் கூற்றுதான்.  தமிழ் காலந்தோறும் ஒலிகள்எழுத்துகள்சொற் கூறுகள்சொற்கள்வாக்கியங்கள்சொற்பொருண்மை எல்லாவற்றிலும் மாறிக் கொண்டுதான் வந்திருக்கிறது.  என்றாலும் கம்பனின் கவிக்கூற்றில்     உண்மை இல்லாமலுமில்லை.  தமிழின் சில அடிப்படைப் பண்புகள்  இன்றளவும் தொடர்கின்றன.
     பாரதிதாசனின் வேறொரு பாட்டைப் பார்ப்போம்
         நாம்  இன்று சென்று நாளையே வருவோம்
           வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்
           இளம்பிறை போல்அதன் விளக்கொளி உருளை
           விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
           காற்றைப் போலக் கடிது மீள்வோம்
           வளையல் நிறைந்த கையுடை
           இளையளை மாண்புற யான்மணந்து உவக்கவே
இக்காலத் தமிழ்ப் பழக்கமுள்ள எவருக்கும் இந்தப் பாட்டு புரியாமல் போகாது.  இது பாரதிதாசனின் சொந்தப் பாட்டல்லசங்கப்பாட்டு.
இன்றே சென்று வருவது நாளைக்
குன்றுஇழி அருவியின் வெண்தேர்முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால்இயல் செலவின் மாலை எய்திச்
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆக(ம்மணந்து உவக்குவமே
     என்கிற குறுந்தொகைப் பாட்டைத்தான் (189) பாரதிதாசன் மறுஆக்கம் செய்திருக்கிறார்.  இங்குக் குறுந்தொகைப் பாட்டு சந்திபிரித்துத் தரப்பட்டிருக்கிறது.
     ‘இழி’, ‘முடுக’, ‘நேமி’, ‘விசும்பு’, ‘துமிப்ப’, ‘கால்இயல்’ ‘சில்நிரை’ போன்ற சொற்களின் பொருள் தெரியாமலிருக்கலாம்.  ஆனால் ஏறத்தாழச் சங்கப் பாட்டின் வாக்கிய அமைப்பு இன்றைக்கும் தொடர்கிறது.  பாரதிதாசன் திறம்படத் தற்காலத் தமிழாக்கியுள்ளார்.
     வாக்கிய அமைப்பில் பெரிய மாறுதல் இல்லை என்றாலும் நீளம் அதிகம்நீளத்திற்குத் தொடர்ந்து வரும் அடைமொழிகள் காரணம்.
     ‘முதிர்ந்த வாழைப் பழங்களும்முற்றிய பலாச்சுளைகளும் சுனைநீரில் விழுந்து உண்டான மதுவைத் தெரியாமல் குடித்த குரங்கு போதையில் மலைச் சாரலிலேயே உறங்கும் மலை நாடனே!’ – என்று அவன் காதலியின் தோழி பேச்சைத் தொடங்குகிறாள் (அகநானூறு, 2). இது பாட்டில் எப்படி நீள்கிறது என்று பார்க்கலாம்.
     செழிப்பான இலைகளையுடைய வாழையின் காய்ப்பு மிகுந்த பெரிய குலையிலுள்ள முதிர்ந்த இனிய கனிதம்மை உண்போரைப் பிறவற்றை உண்ணாமல் தடுத்த மலைச்சாரலிலுள்ள பலாவின் இனிய சுளை ஆகியவற்றால் பாறையின் நீண்ட சுனையில் விளைந்த மதுவைஅறியாது குடித்த ஆண்குரங்குபக்கத்திலுள்ள மிளகுகொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற முடியாமல் நறுமணப் பூக்களால் ஆன படுக்கையில் போதையோடு உறங்கும் எதிர்பாராத இன்பத்தைஉன்மலையிலுள்ள பல்வேறு விலங்கும் எளிதில் எய்தும் நாடனே! – என்று நீள்கிறது பாட்டு.  நல்லவேளை ஆண்குரங்குக்கு (‘கடுவன்’) அடைமொழி இல்லை.  இவ்வளவும் பாதிதான் (9 அடிகள்). மேலும் எட்டடி நீண்டு முடியும் இந்தப் பதினேழடிப் பாட்டு ஒரே வாக்கியத்தால் ஆனது.
     பெயரடைகளும் வினை அடைகளும் கொண்ட பல தொடர்கள் ஒன்றோடொன்று கோத்துக் கொண்டு நூற்றுக் கணக்கான அடிகள் கூட ஒரே வாக்கியமாக முடிவதுண்டுஒரு சொல்லை ஐம்பது அறுபது அடிகள் கடந்து கூடக் கொண்டு சென்று பொருள் காண நேரும்.
     ‘கவிதைக்கு வேண்டாத அடைகள்’ என்கிற விம்ர்சனமும் எழுந்தது.  உண்மையில் புலவனின் உற்றுநோக்கலில் (observation) விளைந்த துல்லியத்தை அடைகளில் காணலாம்மேலே உரையாகத் தரப்பட்டிருப்பதை விடச் செய்யுள் மேலும் இறுக்கமானது.
     ‘தம்மை உண்போரைப் பிறவற்றை உண்ணாமல் தடுத்த’ என்பது பாட்டில் ‘உண்ணுநர்த் தடுத்த’ என்று இரண்டே சொற்களால் இறுகி நிற்கிறது.  இந்த இறுக்கமான துல்லியமே சங்கப் பாடல்களின் மொழி நடைசார்ந்த கவிதையின்பத்திற்கு அடிப்படை.
     எழுது எழில் உண்கண் (மை எழுதிய அழகிய கண்)
     வார்ந்து இலங்குவை எயிறு ( வரிசையாக விளங்கும் கூரிய பற்கள்)
     சிறுகண் யானை
     நெடுஞ் செவிக் குறுமுயல்
     குடாவடி உளியம் (வளைந்த பாதம் கொண்ட கரடி)
     பராரை வேம்பு (பருத்த அடிப்பாகம் கொண்ட வேப்பமரம்)
     சிறுகோட்டுப் பெரும்பழம் (சிறுகிளையில் தொங்கும் பெரும் பலா)
என்பன போன்ற தொடர்கள்  ஒன்றின் தனித்த அம்சத்தை (Distinctive Featureவார்த்தைகளில் வடித்துக் காட்டுகின்றனஇத்தகைய நூற்றுக்கணக்கான தொடர்கள் முன்பழந்தமிழ் நூல்களில் உண்டு.
பாட்டை நேரே பயின்று பெறுகிற இன்பத்தை எவ்வளவு திறம்பட எழுதப்பட்ட உரையாலும் தர முடியாது.  (ஆனாலும் தொடக்கத்தில் உரைகளின் துணை இன்றியமையாதது. ) அப்புறம் உள்ளுறைஇறைச்சி முதலிய குறிப்புப் பொருள் நுட்பங்களும் சேர்ந்து பாரதிதாசன் சொன்ன ‘அடங்கா இன்பம்’ தோன்றும்.
     இந்த இறுக்கத்தைச் ‘செறிவு’ என்பார்கள்.  சங்க இலக்கியங்கள் பற்றி ஒன்றை இங்கே சொல்ல வேண்டும்.
          “செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
          வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”        (புறநானூறு. 53)
   
அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நா”            (புறநானூறு 235)
என்ற அடிகளில் புலவரின் நா (நாக்குகுறிப்பிடப்படுகிறது.  பாடல்கள் வாயால் பாடப்பட்டதற்கான குறிப்பு அது.  ஆனால்தன்னெழுச்சியான பாட்டல்ல.
     ‘செறுத்த’ (செறிவானசெய்யுள் செய்யப்பட்டதுஇதற்கு அடிப்படை ‘வெறுத்த’ (நிறைந்த) ‘கேள்வி’ (கல்வி)’; ‘அம்சொல்’ (அழகிய சொற்களில்), ‘நுண்தேர்ச்சி’ (நுட்பமான தேர்ச்சிபெற்றபுலவர்கள் பாடியது.
          ‘கல்லாக் கடுவன்
          கல்லா மந்தி
          கல்லா வன்பறழ்
          கல்லா இளைஞர்
          கல்லாக் கோவலர்
எனும் தொடர்களில் உள்ள ‘கல்லா’ என்பன போன்ற சில அடைகள் திரும்பத்திரும்ப வருவது போன்ற வாய்மொழிக் கூறுகள்வாய்பாட்டுத் (Formulaதொடர்கள் சங்கப் பாடல்களில் காணப்பட்டாலும்அவை வாய்மொழி மரபைப் பின்பற்றிப் புலவர் புனைந்தவையேயன்றி வாய்மொழியால் ஆக்கப்பட்டவை (Oral Compositionஅல்ல.
     சங்க இலக்கியங்களிலேயே கலித்தொகைபரிபாடல்ஆகியவற்றைப் பின்பழந்தமிழ் நூல்கள் என்பார்கள்.
     அன்றாடப் பேச்சுச் சாயலும் நாடக உரையாடல் தன்மையும் கொண்டதற்காலப் புனைகதையை ஒத்த நடையை அவற்றில் காணலாம்.  தொல்காப்பியரும் அவை நாடக வழக்கும் உலகியல் வழக்கும் பொருந்தியவை என்று சரியாகவே இனங்கண்டிருக்கிறார்.
     முல்லைக்கலி (2) ஏறுதழுவும் - ஜல்லிக்கட்டுக் - களத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது:
          “எழுந்தது துகள்
          ஏற்றனர் மார்பு
          கவிழ்ந்தன மருப்பு
          கலங்கினர் பலர்” - விரைவையும் விறுவிறுப்பையும் ஒருசேரக் காட்டும் சிறுசிறு தொடர்கள்கலித்தொகையும் பரிபாடலும் பிற குறுந்தொகைநற்றிணைஅகநானூறுபுறநானூறுபதிற்றுப்பத்து ஆகியவற்றிலிருந்து தெளிவான மொழிநடை வேறுபாடு உடையவை.  என்றாலும் இந்த முன்பழந்தமிழ் நூல்களிலும் சில சொல்லாலாகிய சிறுதொடர் கொண்ட பாடல்கள் உண்டு.  குறுந்தொகைப்பாட்டொன்றையும் பார்க்கலாம்:
          நள்என்றன்றே யாமம்;
          சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள்;
          முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்;
          ஓர்யான் மன்ற துஞ்சா தேனே (குறுந்தொகை 6)
அடியமைப்பில் இல்லாமல் தொடரமைப்பில் தரப்பட்ட இப்பாடல் சிலசொற்கள் கொண்ட சிறு தொடர்களால் ஆனது.
     பொதுவாக எழுவாய் முதலிலும் வினை முற்று/பயனிலை இறுதியிலும் (‘யாமம் நள்என்றன்று’, ‘மாக்கள்இனிது அடங்கினர்வருவது தமிழ் இயல்பென்றாலும் இன்றளவும் மாறிவருவதும் வழக்கம்தான்.
     இப்பாட்டின் நான்காவது தொடர் மட்டும் சற்று வேறுபட்டது.  யாப்புக்காக அன்றிப் பழந்தமிழ்த் தொடரின் இயல்பாகவேஅது அமைந்துள்ளது.
     “ஓர்யான் மன்ற துஞ்சா தேனே” என்பதற்கு “நான் ஒருத்தி மட்டும் உறங்காமலிருக்கிறேன்” என்பது பொருள்.
     “யான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ” என்கிற இக்காலத் தமிழின் பாரதியார் பாடல் அடியை ஒப்பிட்டுப் பாருங்கள்
          “ஒருநீ ஆகல் வேண்டினும்……” (புறம். 18)
          “ஒருநீ ஆயினை பெரும” (புறம் 125)
என்கிற புறநானூற்று அடிகள் ‘நீ ஒருவன் மட்டுமே ஆக வேண்டினாலும்’, ‘நீ ஒருவன் மட்டுமே ஆனாய்’ என்ற பொருள்களில் வருவதைக் காணலாம்.  சங்கத் தமிழில் முன்பின்னாய் வருவது அக்கால இயல்பான நடையே யன்றிக் கவிதைச் சுதந்திரத்தின் விளைவல்ல.
முருகன் வந்தான்வள்ளி வந்தாள்கபிலர் வந்தார்என்றெல்லாம் பெயரும் வினைமுற்றும் இயைதல் (concord) தமிழ் இயல்பு.  பழந்தமிழில் இது பலதளங்களில் கடை பிடிக்கப்பட்டது.
          “இரவலர் புரவலை நீயும் அல்லை
          புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்” (புறம்.162)
என்று பரிசளிக்கத் தயங்கிய மன்னன் ஒருவனிடம் சினந்து பாடுகிறார் பெருஞ்சித்திரனார்நீ என்பதற்கு இயையப் ‘புரவலை’, ‘அல்லை’ என்பவை வந்துள்ளன.
ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே
 இருவீர் வேறல் இயற்கையு மன்றே
என்பதில் முன்னிலைப் பன்மைக்கேற்ப ‘ஒருவீர்’, ‘இருவீர்’ என வந்துள்ளனஇக்காலத் தமிழில்
          “நீ இரவலர்க்குப் புரவலனும் அல்ல
          புரவலர் இரவலர்க்கு இல்லாமலும் இல்லை
எனவும் 
ஒருவர் தோற்றாலும் தோற்பது உங்கள் குடியே
  இருவர் வெல்வது இயற்கையும் இல்லை”,
எனவும் அவ்விதிகள் நெகிழ்ந்து விட்டன.
          “நினைதலும் நினைதிரோ” – நினைக்கவும் செய்வீர்களா (நினைப்பீர்களா?)
           (நற்றிணை 318)
   
          “நல்கலும் நல்குவர்”     – கொடுக்கவும் செய்வார் (கொடுப்பார்)
           (குறு.37:1)
          “உண்ணலும் உண்ணேன்’ – உண்ணவும் செய்யேன் (உண்ணமாட்டேன்)                  (கலி.22:6)
என உறுதிப்பொருளில் அழுத்திக் கூற வரும் வினை இரட்டைகளைச் சங்கத் தமிழில் காணலாம்.
சங்க இலக்கிய மொழிநடையின் சில கூறுகள் திருக்குறள்பெருங்கதைசிலப்பதிகாரம்மணிமேகலை முதலியவற்றில் தொடர்ந்தாலும் பழையன கழிந்து புதியன புகுந்து நடை மாறியிருப்பதைக் காணலாம்.
கண்டிசின்” - (குறு.112:5)              – காண்
கேட்டிசின்” - (மதுரைக் காஞ்சி 208)     – கேள்
சென்மதி” (பதிற்.53:14)                – செல்
நோக்குமதி” (புறம்.270:7)               – நோக்கு - முதலிய சில ஏவல்வினை வடிவங்கள் பழஞ் சங்க நூல்களில் மட்டுமே மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
கனவின் அரியன காணா” (புறம். 41:11) - கண்டு
தமியள் கேளா” (புறம். 147:3) - கேட்டு முதலிய செய்யா எனும்
வாய்பாட்டு வினையெச்சம் வரும் இடங்களை உணர வேண்டும்.  இன்னும் வேறுபட்ட சிலபல வினை,எச்ச வடிவங்கள் சங்கத் தமிழ் நடையில் உண்டு.
     வானோர்கள்பெண்கள்என – கள் என முடியும் பன்மை வடிவம் ‘உருள்கின்ற’, ‘ஓசனிக்கின்ற’, ‘ஆள்கின்றோர்’, ‘உறைகின்றேன்’ என்பவற்றின் - கின்று’ இடைநிலைகள் போன்றவை பிற்காலத்தில்  பெருகிவிட்டன. ‘இப்போது’ எனும் சொல்லும் அந்தஇந்த என்கிற சுட்டுகளும் மணிமேகலையிலும் எங்கு எனும் சொல் சிலப்பதிகாரத்திலும் முதன்முதலில் இடம்பெறுகின்றனகஞ்சகாரர்மாலைக்காரர் என்பவற்றின் - காரர் என்கிற விகுதி சிலம்பிலும்மணிமேகலையிலும் தலைகாட்டத் தொடங்குகின்றன.
இன்றளவும் தமிழில் வழங்கும் சில எளிய தமிழ்ச் சொற்களுக்குச் சங்க காலப் பொருள் சற்றே வேறாயிருந்தது.  சங்க இலக்கியம் பயில்வோர் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி’ என்பதற்கு, “இதற்குப் பிறகுஇப்பொழுதிலிருந்துஇதற்குமேல்மேலும்” என்பவை தற்காலத் தமிழ்ப் பொருண்மை.  சங்க இலக்கியத்தில் ‘இப்போது’ என்று பொருள்.
     ‘அனைத்து’ என்பதற்கு “(விடுபாடு இல்லாமல்எல்லாம்” என்பதும், “தொடர்ந்து வரும் பெயர்ச் சொல் குறிப்பிடும் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிறைந்திருப்பது (.காஅனைத்து மகளிர் வங்கி)” என்பதும்.  தற்காலத் தமிழ்ப் பொருண்மை.  சங்க இலக்கியத்தில் ‘அத்தன்மையையுடையதுஅத்தகையது – என்பது பொருள்.
     
     அவ் - என்பது அவ்வளவு அவ்வாறுஅவ்வகையில்என்பவை போல இக்காலத்தமிழில் அந்த என்கிற சுட்டுப் பொருளில் (அந்த அளவுஅந்த வகைவருகிறது.  இவ் - என்பதும் அப்படித்தான்.  சங்க இலக்கியங்களில் அவ்இவ்என்பவற்றுக்கு அவைஇவை என்பன பொருள்.
எல்.விஇராமசாமிஐயர்வையாபுரிப் பிள்ளைதெ.பொ.மீனாட்சிசுந்தரம்செ.வை.சண்முகம்முதலிய பலர் சங்க இலக்கிய மொழிநடையை ஆராய்ந்திருக்கிறார்கள்.  அகத்தியலிங்கம் இலக்கணமொழியியல் அடிப்படைகளில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
சங்க இலக்கியங்கள் காட்டுகின்ற சமூக வாழ்க்கைஅரசியல்பொருளாதார நடவடிக்கைகள் முதலிய பலவும் பிற்கால இலக்கியங்களிலும் வரலாற்றிலும் பெரிதும் மாறியுள்ளன. சிலவற்றின் தொடர்ச்சியும் உண்டு.  மொழி நடையிலும் முன்பழந்தமிழ் நூல்கள் தனித்த அடையாளங்கள் கொண்டுள்ளன.
தமிழில் நடைச் செறிவு வேண்டினால் பழந்தமிழ்க் கூறுகளை மீட்டெடுத்து முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்ப் பயன்படுத்தலாம்                 .
              பாமதிவாணன்




No comments:

Post a Comment