Saturday 24 June 2017

அருவித் திளைப்பு

இன்றைய மின்னணுவுலகில் கல்வியின் பரப்பும் வாய்ப்புகளும் பிரமிக்கத்தக்க அளவு விரிந்துகிடக்கின்றன. ‘கல்வி கரையில’  என்பதை இப்போதுபோல் எப்போதும் எவரும் உணர்ந்திருக்க இயலாது.
பெரும் பேரறிஞர்களின் வகுப்புகளை, உரைகளை அவரவர் அறைக்குள் நினைத்தநேரத்தில் கொண்டுவர முடியும். மெய்ந்நிகர் கல்வி (Virtual Education)  முறையில் இடம் கடந்து ஆசிரியருடன் உரையாடக்கூட முடியும்.
மேலைக்கல்வி முறையை இந்தியா உள்வாங்கியபோதே பேரளவு தனியாளுமையுடைய குரு, இருவென இருந்து கேட்கும் சீடர் என்கிற நிலையிலிருந்து வேறுபட்டு அமைப்பு (system) மேலோங்கத் தொடங்கிவிட்டது.
என்றாலும்,
தனியாளுமைகளின் இடம் - தமிழ்க்கல்வியுலகில் சொல்வதானால் - தெ.பொ.மீ. மாணவர்கள், மு.வ. மாணவர்கள், வ.சுப.மா. மாணவர்கள் என்றின்ன பிற அறிஞருக்கு மாணவராயிருப்பதில் உள்ளார்ந்த பெருமைபேசும் மரபில் தொடரத்தான் செய்கிறது. எடுத்துக்காட்டாக, எம் கல்லூரிக் காலத்தில் பேராசிரியர்கள் அ. தட்சிணாமூர்த்தி, குரு. கோவிந்தராஜன், க. இராமையன் ஆகியோர் முறையே தெ.பொ.மீ., மு.வ., வ.சுப.மா. வழிநிலையினர் என்ற பெருமிதம் கொண்டிருந்தனர்; இருக்கின்றனர்.
அந்த வகையில், என்னை ஈர்த்த வேறுசில ஆசிரியர்கள் உண்டெனினும், ஓர் ஆசிரியரை மட்டும் சொல்ல நேர்ந்தால், நான் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி ஐயாவின் மாணவன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். கல்லூரிக் காலத்திற்குப் பின்பும் இடையறாமல் தொடர்பு வைத்திருக்கும் ஒரே ஆசிரியர் அ. தட்சிணாமூர்த்தி ஐயா மட்டுமே.
ஒரு மனிதராக, ஆசிரியராக, அறிஞராக அவரைப் பற்றிப் பதிந்துள்ள சிலவற்றை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
நெடிய உயரம், கருத்த மேனி, கழுத்தளவுக் குப்பாயம், கம்பீரக் கைவீச்சு நடை, உள்ளத்தின் கனிவும் அறிவின் கூர்மையும் ஒருங்கு காட்டும் முகம்.
அருவியெனக் கொட்டும் பாடவுரையின் ஊடாகப் பாடம் சார்ந்த தேவைகேற்ப இலயிக்கச் செய்யும் கணீர்க்குரல் பாட்டு, இடையிடையே அவ்வவ்போது ஊற்றெடுத்துப் பீறிடும் அறிவுத் தூண்டல் வினாக்கள் என ஆர்வமுள்ள மாணவன் கவனத்தைக் கணமும் சிதறவிடாமல் அவர் வகுப்பு அனைவரையும் திக்குமுக்காடச் செய்யும். நாங்கள் வாய்பிளந்து கேட்போம். கொட்டும் அருவியில் மூச்சுத்திணற நாங்கள் நனைந்து திளைத்துக் கொண்டிருப்போம். அவரே அவ்வப்போது நிறுத்துவார். அந்த நிறுத்தங்களில் நாங்கள் குறுக்கிட்டு ஐயங்களை வினாக்களை எழுப்பலாம். ஒரு மணிநேர வகுப்பில் நான்கைந்து இடை நிறுத்தங்கள் இருக்கும். பத்து மணித்துளி உரைப்பகுதியில் முன்பு சொன்ன ஒன்றன் தெளிவு பின்பு கிடைக்கும். எனவே சொல்லி முடிப்பதற்குள் முந்திரிக்கொட்டை வினாக்கள் வேண்டாம்; தீரக்கேட்டபிறகும் ஐயமோ வினாவோ இருந்தால் எழுப்புங்கள் என்பார். இது, அவரது பயிற்றுமுறை.
இலக்கணம், இலக்கியம், தமிழக வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எந்தப் பாடாமானாலும் ஒன்றினொன்று பொருத்தமாகக் கலந்து மிளிரும்.
புதிர்போல் சிலவற்றை முன்வைப்பார்; பாடத்தை நடத்தும் போக்கில் அதனை விடுவிப்பார். நாங்கள் அறிவார்ந்த களிப்பில் திளைப்போம். அவர் பாடம் நடத்தும் முறைகளில் இதுவும் ஒன்று.
ஒருமுறை, “பழனிக்கு அந்தப் பேரு ஏன் வந்தது தெரியுமா? நம்ப கொரடாச்சேரி இருக்கேப்பா, அதுக்கு ஏன் அந்தப்பேரு?” என்றார். எங்கள் பூண்டிக் கல்லூரிக்கு மிக அருகில் (30 கிலோ மீட்டரில்) உள்ள ஊர் அது. மாணவர் சிலர் ‘கொறடா’ (குதிரைச் சவுக்கு) என்பதனடியாக அமைந்த பெயராகலாம் என்று ஊகித்துக் கூறினர். “சரி பழநி?”  என்றார். எல்லோரும் முகமொளிர்ந்து ‘பழம் நீ’ என்று ஔவை முருகனிடம் கூறிய தலமாதலின் அது மருவி ‘பழநி’யாயிற்று என்றோம். குறுநகையோடு அகநானூற்று முதற்பாட்டை நடத்தத் தொடங்கினார்.
அவர் பயிற்றுமுறை பழகிய எங்களுக்கு ஏதோ தொடர்பிருக்கிறது என்று புரிந்தது. புதிர் எங்கு விடுவிக்கப்படும் என்கிற ஆர்வம் வழக்கம்போல் பாடத்தைச் சற்றும் இடையூறின்றிக் கேட்கத் தூண்டியது.
பத்தொன்பது அடிப்பாட்டு அது. பாட்டை 7-19; 1-7 என்று முன்பின்னாக அடி கூட்டி நடத்த வேண்டும். சான்றோர் செய்யுட்கள் தமிழில் செய்யப்பட்டிருந்தாலும் எம்மனோர்க்கு அது இன்றும்கூட வேற்றுமொழி போலத்தான். ஐயா ஏதோ திரைப்பாடல்போல் அனாயாசமாகப் படித்துணர்வார். அறிஞர்கள் நல்லாசிரியராதல் அரிது என்பதற்கான சான்றை நான் எம் கல்லூரி ஆசிரியர் சிலரிடம் கண்டிருக்கிறேன். மாறாக, அம் சொல் நுண்தேர்ச்சிப் புலமையரான ஐயா எமக்கேற்ப எண்பொருளவாகச் செலச் சொல்லவும் வல்லவர். பாட்டின் பொருளோடு செறிவில் மிளிரும் சான்றோர் கவிச்சுவையும் புலப்பட நடத்திக் கொண்டே போனார்.
சான்றோர் செய்யுட்களின் சொற்பொருளை மட்டுமன்றி இலக்கண அமைதியையும் காட்டுவார். அதற்கு முன்பு நடத்தியவற்றையொத்த பகுதிகள் வருமாயின், பெரிதும் விளக்காமல் சுட்டிச் செல்வார். முன்பு நடத்தியதையொத்த பகுதியிலிருந்து மாணவர் சிலர் மீண்டும்மீண்டும் வினா எழுப்பும்போது முகத்தில் சற்றே சினக்குறி காட்டித் தெளிவுபடுத்துவார். அவரது நகைச்சுவைப் புலப்பாடு பெரும்பாலும் பாடம் சார்ந்தே அமையுமாதலின் மாணவர்கள் அடங்கித்தான் பாடம் கேட்பார்கள்.
அவருடைய நகைச்சுவைப் பேச்சுகள் பெரிதும் சொல் விளையாட்டுச் சார்ந்தனவாக இருக்கும். ‘மதிவாணன் பிழைக்கத் தெரியாதவன்’ என்பார் (சுய விளம்பரத் தடை கருதி விளக்காமல் விட்டுவிடுகிறேன்). எள்ளல் மிகமிகக் குறைவே. ‘கணமேயும் காத்தலரிது’  என்கிற வகையில் வெகுளி வெளிப்படும். பகுதி I  தமிழ்ப்பாடத்திற்காகப் பிறதுறைகளுக்கும் போவார். பொதுவாகத் தமிழாசிரியர்களை இளக்காரமாகப் பார்க்கும் பிறதுறை மாணவர்கள் கொஞ்சம் விஞ்சும்போது அவர்களின் நிலையைத் தம் பாடம் நடத்தல் மூலம் உணர்த்துவார். ஐயாவின் ஆங்கிலமும் ஓர் ஆயுதம். அடுத்த வகுப்பிலிருந்தே அவர்கள் இயல்பாக அடங்கிவிடுவார்கள்.
தொங்கலை (Suspense) நீட்டாமல் புதிரை விடுவிக்கும் பகுதிக்கு வந்து விடுகிறேன்.
அகநானூறு முதற்பாட்டின் ‘நெடுவேள் ஆவி… பொதினி’ என்னும் தொடரிலுள்ள ‘பொதினி’ என்பது ‘பழநி’  என மருவியதென்றார்.
‘சிறுகாரோடன் பயினோடு சேர்த்திய கல்’  என்னும் தொடரில் ‘காரோடன்’ என்பது சாணைக்கல் ஆக்குவோனைக் குறிப்பது. காரோடச் சேரி என்பதுதான் ‘கொராடச்சேரி’ என மருவிற்று என்றார். தொழில் சார்ந்து இடப்பெயர்கள் பல வழங்குவதையும் சில எடுத்துக்காட்டுகளால் புலப்படுத்தினார்.
பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆராய்ந்த பலர் பெரிதும் புறப்பாடல்களையும், அகப்பாடல்களில் காணும் சமூக, வரலாற்றுக் குறிப்புகளையுமே பொருட்படுத்தினார்கள். அகப்பாடல்களை அக்காலச் சமூக எதிரொலிப்பாகவே கொண்டு விளக்கியவர்கள் சிலர். ‘பாடல் சான்ற புலனெறி வழக்கு’ என உணர்ந்து விளக்கியோர் பலர்.
தட்சிணாமூர்த்தி ஐயா அகப்பாடல்களின் நாடக வழக்கிற்கும் உலகியல் வழக்கிற்குமான உறவை இலக்கிய நயந்தோன்றப் புலப்படுத்துவார்கள்.
சங்க காலத்தில் கட்டற்ற காதல் அனுமதிக்கப்பட்டதற்கு “யாயும் ஞாயும் யாரோகியரோ…” என்னும் குறுந்தொகைப் பாட்டை வகைமாதிரிச் (Typical) சான்றாகக் காட்டுவது பெருவழக்கு. காலமாற்றத்தைக்காட்ட அக்கவிதையை “உனக்கும் எனக்கும் ஒரே ஊர்…” என்று பகடி செய்து மீரா புனைந்த கவிதையும் புகழ்பெற்றது.
மாறாக, சங்க காலத்திலும் காதல் ஏற்கப்படவில்லை என்பதற்கு இப்பாட்டும் சான்று என்றபோது, நாங்கள் ஐயத்துடன் நோக்கினோம்.
தாய்வழியிலோ தந்தைவழியிலோ உறவற்ற நம் நெஞ்சம் - சமூக வழக்கத்திற்கு மாறாகக் - கலந்தன என்னும் வியப்பே இதனை இலக்கியமாக்குகிறது என்றார் அவர். மேலும், அலர்தூற்றுதல், இற்செறித்தல், முதலியவை காதலை அனுமதிக்கும் சமூகத்தில் இருக்காது; இருக்கவும் தேவையில்லை என விளக்கினார். நாங்கள் வியந்தோம்.
நாங்கள் கருத்திணங்கியது (convince) உணர்ந்தவுடன் சற்றே எங்களை நோக்கிக் குனிந்து கண்களில் தோன்றும் நகைக் குறிப்புடன் “ஊம். இப்படியெல்லாம் பாக்கணும்” என்பார். அவரது குரல் நயத்தையும் குறுநகைக் கண்களையும் எழுத்தில் தரமுடியவில்லையே என்று ஆதங்கமாயிருக்கிறது. இப்படி அவர் அள்ளித் தெளித்த ஆராய்ச்சித் தூண்டல்கள் பலப்பல.
ஐயா, வரலாறு நடத்தும்போது இலக்கியச் சான்றுகளை விழிப்புடன் கையாள்வார். இலக்கியங்களின் புனைவுகளையும், பொருள் காண்பதன் பிறழ்வுகளையும் சுட்டிக் காட்டுவார். கல்வெட்டுகளில் இருப்பதாலேயே முற்றுமுழுதான வரலாற்று மெய்ம்மை (fact) என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லை வெட்டுவித்த அரசனின் சார்பு அதில் இருக்கும். பிற சான்றுகளும் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பார்.
மாணவர்களுக்குத் “தமிழக வரலாறும் பண்பாடும்” என்னும் பாடம் நடத்த எடுத்த குறிப்புகள் ஒரு கட்டத்தில் மாணவர்களுக்குதவும் வகையில் - அதாவது வினாக்களுக்கான வாய்ப்பினடிப்படையில் - ஒரு நூலாக விரிந்தது. 1970களிலேயே அவர் புகழ் பரவக் காரணமானது ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்னும் நூல்தான். ஆனால், அது வெறும் பாடத்துணைக்குறிப்பு (Notes) அன்று.
இலக்கிய மாணவர்களுக்கு வரலாற்றறிவின் அவசியத்தையும் அளவையும் உணர்த்திப் பாடம் நடத்துவார். இளநிலைப் பட்ட அளவில் பெரிதும் தமிழறிஞர்கள் எழுதிய ஏதேனும் ஓரிரு வரலாற்று நூல்களைப் பின்பற்றிப் பாடம் நடத்துவது வழக்கம். ஐயா அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அவ்வப்போது வரும் நூல்களைப் படித்துப் புதுப்பித்துக் கொண்டே வருவார். சிறப்பாகக் கல்வெட்டுச் சொற்களை ஆய்ந்தறியும் ஆர்வம் அவரிடமிருந்தது. இலக்கிய இலக்கணம் நடத்தவும் அது துணைபுரிந்தது.
கல்வெட்டிலுள்ள ‘கலம்’ பற்றி நடத்தும்போது தொல்காப்பியம் ஆறாம் வேற்றுமைப் பொருளில் ஒன்றாகக் கலம் என்று குறிப்பிடுவதை நினைவூட்டுவார்; உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டுகளைச் சொல்வார். இலக்கணம் நடத்தும்போது கல்வெட்டை நினைவூட்டுவார். இவை ஒன்றையொன்று தெளிவுபடுத்தும்.
அவர் தெ.பொ.மீ. மாணவர். அவரிடம் தெ.பொ.மீ. செல்வாக்கு உண்டு. ஆதாரமும் தருக்கமும் இல்லாமல் பற்றின் காரணமாகக் கூறப்படுவனவற்றை அவர் ஒப்புவதில்லை. ஆனால் கருத்து வேறுபாடிருப்பினும் எல்லாத்தரப்பு அறிஞர்களையும் மதித்துக் குறிப்பிடுவார். எவரையும் எதன்பொருட்டும் எடுத்தெறிந்து பேசியதில்லை. மாற்றுக் கருத்துடையோராயினும் அவர்தம் புலமைநலஞ்சான்ற விவாதங்களை உணர்ச்சி வயப்படாமல் குறிப்பிடுவார்.
தமக்கு உடன்பாடானவற்றை நன்கு கூறுவார். வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கைலாசபதி முதலியோரை அறிமுகப்படுத்திப் பேசியவர் ஐயா அவர்கள்தாம். (நவீன இலக்கியம் சார்ந்து பேசும்போது கைலாசபதி போன்றோரை அறிமுகப்படுத்திவர் பேராசிரியர் ந. மெய்ப்பொருள்).
வெறும் மேற்கோள்களாக அன்றி அவரவர் நோக்குநிலை, நிலைப்பாடு போன்றவற்றையுங் கூறுவார்.
நான் பயின்ற காலத்தில் ஒருமுறை கல்லூரித் தமிழ்த்துறை நூலகத்திற்குப் பல்கலைக்கழக நல்கைக்குழு (UGC) கணிசமான நிதி நல்கியது. அப்போது உலகளாவிய நிலையிலான தமிழ்சார்ந்த நூல்கள் பலவற்றை வாங்குவதற்குக் காரணமாயிருந்தவர் ஐயா அவர்கள். அவற்றுள் கைலாசபதியின் Tamil Heroic Poetryயின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பு குறிப்பிடத்தக்கது.
நல்கைக்குழு நிதியிலேயே இருபுறமும் கண்ணாடியுள்ள நிலைப்பேழைகள் வாங்கப்பட்டன. நூல்களைப் பார்த்துப் பரவசமுற்றோம். ஆனால் பதிவேட்டில் ஏற்றி மாணவர்களுக்கு வழங்குவதற்கு மிகத்தாமதமாயிற்று. நாங்கள் “ஐயா” கேட்லாக் (Catalogue) தயாராகிவிட்டதா?” என்று ஒருமுறை கேட்டபோது “வேண்டுமானால் நீங்கள் கேட்ட லாக் (lock)கை நான் திறந்துவிடுகிறேன். ஓரிரு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லில் விளையாடிச் சிரித்தார்; தரவும் செய்தார்.
படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மேன்மேலும் படிக்கவேண்டியவற்றைச் சொல்லி ஊக்குவிப்பதும், படிப்பில் பின்தங்கியவர்களைப் படிப்படியாக மேலேற்ற வழிகாட்டுவதும் அவர் இயல்பு. படிப்பையோ மதிப்பெண்களையோ சாதி முதலியவற்றையோ வைத்து, மாணவர்களிடம் கொள்ளும் ஈடுபாட்டில் ஏற்றத்தாழ்வு காட்டமாட்டார்.
எம் கல்லூரித் தமிழ் முதுகலைத் தலைவராக வந்த முனைவர் அ.மா. பரிமணம் அவர்கள் பெரும்புலமையர்; மிகவும் கண்டிப்பானவர்; மிகவும் நேர்மையுடையவர்; முறைமை கடைப்பிடிப்பவர்.
அவரது கறாரான அளவுகோல்படி நெறிமுறை, படிப்பு ஆகியவற்றில் தேறிய தமிழ்த்துறை ஆசிரியர்கள் மிகச்சிலரே. அவர்களுள் தலையாயவர் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி ஐயா அவர்கள் என்பது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பேராசிரியர் அ.மா.ப. வை உணர்ந்தோர்க்கே இது புலனாகும்.
நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய பின்னரே, அவர் மொழிபெயர்ப்புத் துறையில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்குத் தூண்டித் துணை நின்றவர் எம் பூண்டிக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் இராமன் அவர்கள் (மொழிபெயர்ப்புக்கென்றே நடந்த Scholar Miscellaneous என்னும் இதழின் ஆசிரியர்).
மொழிபெயர்ப்பின் இயல்புகள் நுட்பங்கள் முதலியன பற்றி விளக்கும் தகுதி எனக்கில்லை என்றாலும் அதன் சிரமங்களை ஓரளவு உணர்ந்தவன் நான். மூலமொழி இலக்குமொழி இரண்டிலும் புலமை வேண்டும் என்பது வெளிப்படை. செய்திகளைவிடவும் மொழிபெயர்ப்பதைவிடவும் புனைகதை மொழிபெயர்ப்பது கடினம். புனைகதைகளைவிடக் கவிதை மொழிபெயர்ப்புக் கடினம். அண்மைக்காலக் கவிதைகளைவிடப் பழந்தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பு மிகக் கடினம்.
பழந்தமிழ்ப்பாக்கள் கவிதைகள் மட்டுமல்ல. அவை வரலாறு, சமூகம், பண்பாடு முதலியவற்றுக்கான தரவுகளை வழங்கும் மூலங்களாகவும் உள்ளன.
தட்சிணாமூர்த்தி ஐயாவின் பழந்தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள் புலமை மேலோங்கிய மொழிபெயர்ப்புகள். கவித்துவ நயத்தின் பொருட்டுச் சற்றும் துல்லியம் விடுபடுதல் கூடாதென்பது அவர் நிலைப்பாடு.
பழந்தமிழ் நூல்களை அணுகுதல் எளிதன்று. உரைகளைக் கொண்டு தொடங்கிப் பயின்று பயின்று உரைகடந்த சில பொருட்கூறுகளையும் கண்டு தெளிய வேண்டும்; புதிய ஆய்வுகளால் நிறுவப்பட்டவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். ‘தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப் படி’ என்பது சங்கத்தமிழ் பயிலப் பாரதிதாசன் சொல்லும் வழியாகும்.
சொற்பொருள் மட்டுமன்றி மிகநீண்ட தொடரமைப்பும் புரிதலில் சிக்கலை ஏற்படுத்தும்.
‘ஆடுகள மகன்’ என்பதை ‘Son of dancing field’ என்று சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தோர் உண்டு. நம் காலத் தமிழில் - பழந்தமிழிலும் உண்டுதான் - மகன் என்பது உறவுமுறைப் பெயர். பழந்தமிழில் முறைப்பெயராகவும் பொதுவான உயர்திணை ஆண்பாற் பெயராகவும் இருந்ததால்தான் தொல்காப்பியர் ‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ என விதந்து கூறுகிறார் (பெயரியல்). முறைமை சுட்டினால் அவை விரவுப் பெயர் என்கிறார்.
‘ஆடுகளமகன்’ என்பதை ‘ஆட்டன்’ என்கிறது அகநானூறு. (பாடுகின்றவளைப் ‘பாட்டி’ என்னும் வழக்கும் உள்ளது.)
ஒரு சொல்லை, தொடரை உணர்ந்துகொள்ள ஒட்டுமொத்தப் பழந்தமிழ்ப் பாக்களிலும் பயிற்சி வேண்டும்.
சமூக உணர்வும் மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாதது.
அகநானூற்று முதற்பாட்டின், ‘சிறு காரோடன்’ என்பதை ‘low-born whetstone maker’ என்று மொழிபெயர்த்திருக்கிறார் ஜார்ஜ் ஹார்ட். இது முற்றிலும் பிழை என்றோ, பழந்தமிழ்ச் சொற் பயில்வுக்கு முரணானதென்றோ சொல்ல முடியாது. இத்தொடருக்கு, ‘சிறியனாகிய சாணைக்கல் செய்வோன்’ என்றுதான் ந.மு. வேங்கடசாமிநாட்டாரும் ரா. வேங்கடாசலம் பிள்ளையும் உரை கண்டுள்ளனர். ‘இழிபிறப்பாளன்’ என்னும் தொடர் பழந்தமிழில் இருக்கிறது. ஆனால் தட்சிணாமூர்த்தி ஐயா, Karotan of lowly profession என்று ‘சிறு’ என்னும் அடையைப் பிறப்புக் குறித்ததாக அன்றித் தொழில் குறித்ததாகக் கொள்கிறார். பாட்டில் பிறப்பு விதந்தோதப்படாத நிலையில் ஐயா சமூக உணர்வுவயப்பட்டுப் பொருள் கொள்கிறார்.
நான் 1984இல் கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அப்பாவைத் தேடி எம் இல்லத்திற்கு வரும் நண்பர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் முதலியோரிடம் நான் ஆசிரியப் பணி பெற்றதை அப்பா தெரிவிப்பார். அவர்களில் சிலர் இலவச ஆலோசனை நல்கிச் செல்வார்கள். ஒரு மூத்த, கல்லூரிப் பேராசிரியர், தோற்றத்தில் - நடை, உடை, பாவனைகளில் - மாற்றம் தேவை என்று சொல்லிப்போனார். மறுநாள் தட்சிணாமூர்த்தி ஐயா அவர்கள் வந்திருந்தார்கள். நான் முந்தையநாள் அறிவுரையைச் சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள். “தோற்றம் சில நிமிடங்கள்தான் மதி! முடிந்தவரை பொறுப்பாகப் பாடத்தை ஆயத்தம் செய்து நடத்து” என்றார்கள்.
அவ்வப்போது எழும் சிலபல ஐயங்களை நான் - இன்றளவும் - ஐயாவிடம்தான் கேட்பேன் (அரிதாக வேறு சிலரிடமும் கேட்பேன்). எழுப்பும் ஐயத்திற்கான விளக்கம் கூறித் தொடர்புடையவற்றையும் தெளிவுபடுத்துவார். இதனால் வேறுபல ஐயங்கள் அவரைக் கேட்காமலேயே தீர்ந்துவிடும்.
அப்புறம், ஐயா அவர்களோடு தனிப்பட்ட முறையில் உணர்வொன்றி ஒருவரையொருவர் உசாவிடச் செய்து கொண்டிருக்கும் ‘ஆஸ்த்மா’ர்த்தத் தொடர்பையும் குறிப்பிட வேண்டும். குளிர்காலமெனில் ஐயாவிடம் சற்றுத் தயங்கித்தான் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்; சுருக்கமாகப் பேசுவேன்; முதலில் உடல்நிலை பற்றி உசாவுவேன். ஐயா அவர்களின் துணைவியாரும், செல்வ - செல்ல - மகளும் அவரின் பேறு. விருந்துபேணலில் குறையிருக்காது. ஆனால், அவர் உடல்நலங்கருதி அவ்வப்போது  உரையாடலை அன்போடு குறுக்கிட்டுக் குறுக்கிவிடுவார்கள். நாங்கள் ஐயாவின் நலங்கருதி ஆர்வத்தை அடக்கிக் கொண்டு விடைபெறுவோம். அவர் கோடைக்காலத்தில் என்னிடம் உசாவுவார் (எனக்கு விதிவிலக்காகக் கோடைதான் மூச்சிரைப்புக் காலம்).
சிறப்புச் சொற்பொழிவு, கருத்தரங்கு, பயிலரங்கு எதுவாக இருந்தாலும் அவையோரை ஐயா அசத்திவிடுவார். அண்மையில் கல்லூரித் தமிழாசிரியர்களும் ஆங்கில ஆசிரியர்களும் கலந்துகொண்ட பயிலரங்கில் ஐயா உரையாற்றியதைக் கேட்டு, ஆங்கில ஆசிரியர் பலரும் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி உசாவித் தேடமுற்பட்ட உற்சாகத்தைக் கண்ணாரக் கண்டேன்; நெஞ்சாரக் களித்தேன்; ‘எங்க ஐயா’ என்று உரிமையோடு சொல்லிக்கொண்டு, அவர் புகழ் ஒளியில் நானும் இரவல் கொண்டேன்.
தமிழின் தொல்சீர் செவ்விலக்கியங்களைப் பிறமொழியாளரிடமும், - அவற்றின் துல்லியம் குன்றாமல் கொண்டு செல்ல ஆடம்பரமின்றி அமைதியாக அரிய ஆக்கப் பணிகள் மேற்கொள்கிற ஒரு தமிழ்ச் சாதனையறிஞரைத் தேடி விருதளித்ததன் மூலம் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் பெருமை பெற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து. நானும் ஐயாவின் மாணவருள் ஒருவன் என்பதை எண்ணிப் பெருமிதங் கொள்கிறேன்.
                                                                                     --  பா. மதிவாணன்
பேராசிரியர்
தமிழ்த்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620024
தமிழ்நாடு - இந்தியா

/

No comments:

Post a Comment