Saturday, 24 June 2017

அருவித் திளைப்பு

இன்றைய மின்னணுவுலகில் கல்வியின் பரப்பும் வாய்ப்புகளும் பிரமிக்கத்தக்க அளவு விரிந்துகிடக்கின்றன. ‘கல்வி கரையில’  என்பதை இப்போதுபோல் எப்போதும் எவரும் உணர்ந்திருக்க இயலாது.
பெரும் பேரறிஞர்களின் வகுப்புகளை, உரைகளை அவரவர் அறைக்குள் நினைத்தநேரத்தில் கொண்டுவர முடியும். மெய்ந்நிகர் கல்வி (Virtual Education)  முறையில் இடம் கடந்து ஆசிரியருடன் உரையாடக்கூட முடியும்.
மேலைக்கல்வி முறையை இந்தியா உள்வாங்கியபோதே பேரளவு தனியாளுமையுடைய குரு, இருவென இருந்து கேட்கும் சீடர் என்கிற நிலையிலிருந்து வேறுபட்டு அமைப்பு (system) மேலோங்கத் தொடங்கிவிட்டது.
என்றாலும்,
தனியாளுமைகளின் இடம் - தமிழ்க்கல்வியுலகில் சொல்வதானால் - தெ.பொ.மீ. மாணவர்கள், மு.வ. மாணவர்கள், வ.சுப.மா. மாணவர்கள் என்றின்ன பிற அறிஞருக்கு மாணவராயிருப்பதில் உள்ளார்ந்த பெருமைபேசும் மரபில் தொடரத்தான் செய்கிறது. எடுத்துக்காட்டாக, எம் கல்லூரிக் காலத்தில் பேராசிரியர்கள் அ. தட்சிணாமூர்த்தி, குரு. கோவிந்தராஜன், க. இராமையன் ஆகியோர் முறையே தெ.பொ.மீ., மு.வ., வ.சுப.மா. வழிநிலையினர் என்ற பெருமிதம் கொண்டிருந்தனர்; இருக்கின்றனர்.
அந்த வகையில், என்னை ஈர்த்த வேறுசில ஆசிரியர்கள் உண்டெனினும், ஓர் ஆசிரியரை மட்டும் சொல்ல நேர்ந்தால், நான் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி ஐயாவின் மாணவன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். கல்லூரிக் காலத்திற்குப் பின்பும் இடையறாமல் தொடர்பு வைத்திருக்கும் ஒரே ஆசிரியர் அ. தட்சிணாமூர்த்தி ஐயா மட்டுமே.
ஒரு மனிதராக, ஆசிரியராக, அறிஞராக அவரைப் பற்றிப் பதிந்துள்ள சிலவற்றை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.
நெடிய உயரம், கருத்த மேனி, கழுத்தளவுக் குப்பாயம், கம்பீரக் கைவீச்சு நடை, உள்ளத்தின் கனிவும் அறிவின் கூர்மையும் ஒருங்கு காட்டும் முகம்.
அருவியெனக் கொட்டும் பாடவுரையின் ஊடாகப் பாடம் சார்ந்த தேவைகேற்ப இலயிக்கச் செய்யும் கணீர்க்குரல் பாட்டு, இடையிடையே அவ்வவ்போது ஊற்றெடுத்துப் பீறிடும் அறிவுத் தூண்டல் வினாக்கள் என ஆர்வமுள்ள மாணவன் கவனத்தைக் கணமும் சிதறவிடாமல் அவர் வகுப்பு அனைவரையும் திக்குமுக்காடச் செய்யும். நாங்கள் வாய்பிளந்து கேட்போம். கொட்டும் அருவியில் மூச்சுத்திணற நாங்கள் நனைந்து திளைத்துக் கொண்டிருப்போம். அவரே அவ்வப்போது நிறுத்துவார். அந்த நிறுத்தங்களில் நாங்கள் குறுக்கிட்டு ஐயங்களை வினாக்களை எழுப்பலாம். ஒரு மணிநேர வகுப்பில் நான்கைந்து இடை நிறுத்தங்கள் இருக்கும். பத்து மணித்துளி உரைப்பகுதியில் முன்பு சொன்ன ஒன்றன் தெளிவு பின்பு கிடைக்கும். எனவே சொல்லி முடிப்பதற்குள் முந்திரிக்கொட்டை வினாக்கள் வேண்டாம்; தீரக்கேட்டபிறகும் ஐயமோ வினாவோ இருந்தால் எழுப்புங்கள் என்பார். இது, அவரது பயிற்றுமுறை.
இலக்கணம், இலக்கியம், தமிழக வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எந்தப் பாடாமானாலும் ஒன்றினொன்று பொருத்தமாகக் கலந்து மிளிரும்.
புதிர்போல் சிலவற்றை முன்வைப்பார்; பாடத்தை நடத்தும் போக்கில் அதனை விடுவிப்பார். நாங்கள் அறிவார்ந்த களிப்பில் திளைப்போம். அவர் பாடம் நடத்தும் முறைகளில் இதுவும் ஒன்று.
ஒருமுறை, “பழனிக்கு அந்தப் பேரு ஏன் வந்தது தெரியுமா? நம்ப கொரடாச்சேரி இருக்கேப்பா, அதுக்கு ஏன் அந்தப்பேரு?” என்றார். எங்கள் பூண்டிக் கல்லூரிக்கு மிக அருகில் (30 கிலோ மீட்டரில்) உள்ள ஊர் அது. மாணவர் சிலர் ‘கொறடா’ (குதிரைச் சவுக்கு) என்பதனடியாக அமைந்த பெயராகலாம் என்று ஊகித்துக் கூறினர். “சரி பழநி?”  என்றார். எல்லோரும் முகமொளிர்ந்து ‘பழம் நீ’ என்று ஔவை முருகனிடம் கூறிய தலமாதலின் அது மருவி ‘பழநி’யாயிற்று என்றோம். குறுநகையோடு அகநானூற்று முதற்பாட்டை நடத்தத் தொடங்கினார்.
அவர் பயிற்றுமுறை பழகிய எங்களுக்கு ஏதோ தொடர்பிருக்கிறது என்று புரிந்தது. புதிர் எங்கு விடுவிக்கப்படும் என்கிற ஆர்வம் வழக்கம்போல் பாடத்தைச் சற்றும் இடையூறின்றிக் கேட்கத் தூண்டியது.
பத்தொன்பது அடிப்பாட்டு அது. பாட்டை 7-19; 1-7 என்று முன்பின்னாக அடி கூட்டி நடத்த வேண்டும். சான்றோர் செய்யுட்கள் தமிழில் செய்யப்பட்டிருந்தாலும் எம்மனோர்க்கு அது இன்றும்கூட வேற்றுமொழி போலத்தான். ஐயா ஏதோ திரைப்பாடல்போல் அனாயாசமாகப் படித்துணர்வார். அறிஞர்கள் நல்லாசிரியராதல் அரிது என்பதற்கான சான்றை நான் எம் கல்லூரி ஆசிரியர் சிலரிடம் கண்டிருக்கிறேன். மாறாக, அம் சொல் நுண்தேர்ச்சிப் புலமையரான ஐயா எமக்கேற்ப எண்பொருளவாகச் செலச் சொல்லவும் வல்லவர். பாட்டின் பொருளோடு செறிவில் மிளிரும் சான்றோர் கவிச்சுவையும் புலப்பட நடத்திக் கொண்டே போனார்.
சான்றோர் செய்யுட்களின் சொற்பொருளை மட்டுமன்றி இலக்கண அமைதியையும் காட்டுவார். அதற்கு முன்பு நடத்தியவற்றையொத்த பகுதிகள் வருமாயின், பெரிதும் விளக்காமல் சுட்டிச் செல்வார். முன்பு நடத்தியதையொத்த பகுதியிலிருந்து மாணவர் சிலர் மீண்டும்மீண்டும் வினா எழுப்பும்போது முகத்தில் சற்றே சினக்குறி காட்டித் தெளிவுபடுத்துவார். அவரது நகைச்சுவைப் புலப்பாடு பெரும்பாலும் பாடம் சார்ந்தே அமையுமாதலின் மாணவர்கள் அடங்கித்தான் பாடம் கேட்பார்கள்.
அவருடைய நகைச்சுவைப் பேச்சுகள் பெரிதும் சொல் விளையாட்டுச் சார்ந்தனவாக இருக்கும். ‘மதிவாணன் பிழைக்கத் தெரியாதவன்’ என்பார் (சுய விளம்பரத் தடை கருதி விளக்காமல் விட்டுவிடுகிறேன்). எள்ளல் மிகமிகக் குறைவே. ‘கணமேயும் காத்தலரிது’  என்கிற வகையில் வெகுளி வெளிப்படும். பகுதி I  தமிழ்ப்பாடத்திற்காகப் பிறதுறைகளுக்கும் போவார். பொதுவாகத் தமிழாசிரியர்களை இளக்காரமாகப் பார்க்கும் பிறதுறை மாணவர்கள் கொஞ்சம் விஞ்சும்போது அவர்களின் நிலையைத் தம் பாடம் நடத்தல் மூலம் உணர்த்துவார். ஐயாவின் ஆங்கிலமும் ஓர் ஆயுதம். அடுத்த வகுப்பிலிருந்தே அவர்கள் இயல்பாக அடங்கிவிடுவார்கள்.
தொங்கலை (Suspense) நீட்டாமல் புதிரை விடுவிக்கும் பகுதிக்கு வந்து விடுகிறேன்.
அகநானூறு முதற்பாட்டின் ‘நெடுவேள் ஆவி… பொதினி’ என்னும் தொடரிலுள்ள ‘பொதினி’ என்பது ‘பழநி’  என மருவியதென்றார்.
‘சிறுகாரோடன் பயினோடு சேர்த்திய கல்’  என்னும் தொடரில் ‘காரோடன்’ என்பது சாணைக்கல் ஆக்குவோனைக் குறிப்பது. காரோடச் சேரி என்பதுதான் ‘கொராடச்சேரி’ என மருவிற்று என்றார். தொழில் சார்ந்து இடப்பெயர்கள் பல வழங்குவதையும் சில எடுத்துக்காட்டுகளால் புலப்படுத்தினார்.
பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆராய்ந்த பலர் பெரிதும் புறப்பாடல்களையும், அகப்பாடல்களில் காணும் சமூக, வரலாற்றுக் குறிப்புகளையுமே பொருட்படுத்தினார்கள். அகப்பாடல்களை அக்காலச் சமூக எதிரொலிப்பாகவே கொண்டு விளக்கியவர்கள் சிலர். ‘பாடல் சான்ற புலனெறி வழக்கு’ என உணர்ந்து விளக்கியோர் பலர்.
தட்சிணாமூர்த்தி ஐயா அகப்பாடல்களின் நாடக வழக்கிற்கும் உலகியல் வழக்கிற்குமான உறவை இலக்கிய நயந்தோன்றப் புலப்படுத்துவார்கள்.
சங்க காலத்தில் கட்டற்ற காதல் அனுமதிக்கப்பட்டதற்கு “யாயும் ஞாயும் யாரோகியரோ…” என்னும் குறுந்தொகைப் பாட்டை வகைமாதிரிச் (Typical) சான்றாகக் காட்டுவது பெருவழக்கு. காலமாற்றத்தைக்காட்ட அக்கவிதையை “உனக்கும் எனக்கும் ஒரே ஊர்…” என்று பகடி செய்து மீரா புனைந்த கவிதையும் புகழ்பெற்றது.
மாறாக, சங்க காலத்திலும் காதல் ஏற்கப்படவில்லை என்பதற்கு இப்பாட்டும் சான்று என்றபோது, நாங்கள் ஐயத்துடன் நோக்கினோம்.
தாய்வழியிலோ தந்தைவழியிலோ உறவற்ற நம் நெஞ்சம் - சமூக வழக்கத்திற்கு மாறாகக் - கலந்தன என்னும் வியப்பே இதனை இலக்கியமாக்குகிறது என்றார் அவர். மேலும், அலர்தூற்றுதல், இற்செறித்தல், முதலியவை காதலை அனுமதிக்கும் சமூகத்தில் இருக்காது; இருக்கவும் தேவையில்லை என விளக்கினார். நாங்கள் வியந்தோம்.
நாங்கள் கருத்திணங்கியது (convince) உணர்ந்தவுடன் சற்றே எங்களை நோக்கிக் குனிந்து கண்களில் தோன்றும் நகைக் குறிப்புடன் “ஊம். இப்படியெல்லாம் பாக்கணும்” என்பார். அவரது குரல் நயத்தையும் குறுநகைக் கண்களையும் எழுத்தில் தரமுடியவில்லையே என்று ஆதங்கமாயிருக்கிறது. இப்படி அவர் அள்ளித் தெளித்த ஆராய்ச்சித் தூண்டல்கள் பலப்பல.
ஐயா, வரலாறு நடத்தும்போது இலக்கியச் சான்றுகளை விழிப்புடன் கையாள்வார். இலக்கியங்களின் புனைவுகளையும், பொருள் காண்பதன் பிறழ்வுகளையும் சுட்டிக் காட்டுவார். கல்வெட்டுகளில் இருப்பதாலேயே முற்றுமுழுதான வரலாற்று மெய்ம்மை (fact) என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லை வெட்டுவித்த அரசனின் சார்பு அதில் இருக்கும். பிற சான்றுகளும் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பார்.
மாணவர்களுக்குத் “தமிழக வரலாறும் பண்பாடும்” என்னும் பாடம் நடத்த எடுத்த குறிப்புகள் ஒரு கட்டத்தில் மாணவர்களுக்குதவும் வகையில் - அதாவது வினாக்களுக்கான வாய்ப்பினடிப்படையில் - ஒரு நூலாக விரிந்தது. 1970களிலேயே அவர் புகழ் பரவக் காரணமானது ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்னும் நூல்தான். ஆனால், அது வெறும் பாடத்துணைக்குறிப்பு (Notes) அன்று.
இலக்கிய மாணவர்களுக்கு வரலாற்றறிவின் அவசியத்தையும் அளவையும் உணர்த்திப் பாடம் நடத்துவார். இளநிலைப் பட்ட அளவில் பெரிதும் தமிழறிஞர்கள் எழுதிய ஏதேனும் ஓரிரு வரலாற்று நூல்களைப் பின்பற்றிப் பாடம் நடத்துவது வழக்கம். ஐயா அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அவ்வப்போது வரும் நூல்களைப் படித்துப் புதுப்பித்துக் கொண்டே வருவார். சிறப்பாகக் கல்வெட்டுச் சொற்களை ஆய்ந்தறியும் ஆர்வம் அவரிடமிருந்தது. இலக்கிய இலக்கணம் நடத்தவும் அது துணைபுரிந்தது.
கல்வெட்டிலுள்ள ‘கலம்’ பற்றி நடத்தும்போது தொல்காப்பியம் ஆறாம் வேற்றுமைப் பொருளில் ஒன்றாகக் கலம் என்று குறிப்பிடுவதை நினைவூட்டுவார்; உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டுகளைச் சொல்வார். இலக்கணம் நடத்தும்போது கல்வெட்டை நினைவூட்டுவார். இவை ஒன்றையொன்று தெளிவுபடுத்தும்.
அவர் தெ.பொ.மீ. மாணவர். அவரிடம் தெ.பொ.மீ. செல்வாக்கு உண்டு. ஆதாரமும் தருக்கமும் இல்லாமல் பற்றின் காரணமாகக் கூறப்படுவனவற்றை அவர் ஒப்புவதில்லை. ஆனால் கருத்து வேறுபாடிருப்பினும் எல்லாத்தரப்பு அறிஞர்களையும் மதித்துக் குறிப்பிடுவார். எவரையும் எதன்பொருட்டும் எடுத்தெறிந்து பேசியதில்லை. மாற்றுக் கருத்துடையோராயினும் அவர்தம் புலமைநலஞ்சான்ற விவாதங்களை உணர்ச்சி வயப்படாமல் குறிப்பிடுவார்.
தமக்கு உடன்பாடானவற்றை நன்கு கூறுவார். வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கைலாசபதி முதலியோரை அறிமுகப்படுத்திப் பேசியவர் ஐயா அவர்கள்தாம். (நவீன இலக்கியம் சார்ந்து பேசும்போது கைலாசபதி போன்றோரை அறிமுகப்படுத்திவர் பேராசிரியர் ந. மெய்ப்பொருள்).
வெறும் மேற்கோள்களாக அன்றி அவரவர் நோக்குநிலை, நிலைப்பாடு போன்றவற்றையுங் கூறுவார்.
நான் பயின்ற காலத்தில் ஒருமுறை கல்லூரித் தமிழ்த்துறை நூலகத்திற்குப் பல்கலைக்கழக நல்கைக்குழு (UGC) கணிசமான நிதி நல்கியது. அப்போது உலகளாவிய நிலையிலான தமிழ்சார்ந்த நூல்கள் பலவற்றை வாங்குவதற்குக் காரணமாயிருந்தவர் ஐயா அவர்கள். அவற்றுள் கைலாசபதியின் Tamil Heroic Poetryயின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பு குறிப்பிடத்தக்கது.
நல்கைக்குழு நிதியிலேயே இருபுறமும் கண்ணாடியுள்ள நிலைப்பேழைகள் வாங்கப்பட்டன. நூல்களைப் பார்த்துப் பரவசமுற்றோம். ஆனால் பதிவேட்டில் ஏற்றி மாணவர்களுக்கு வழங்குவதற்கு மிகத்தாமதமாயிற்று. நாங்கள் “ஐயா” கேட்லாக் (Catalogue) தயாராகிவிட்டதா?” என்று ஒருமுறை கேட்டபோது “வேண்டுமானால் நீங்கள் கேட்ட லாக் (lock)கை நான் திறந்துவிடுகிறேன். ஓரிரு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லில் விளையாடிச் சிரித்தார்; தரவும் செய்தார்.
படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மேன்மேலும் படிக்கவேண்டியவற்றைச் சொல்லி ஊக்குவிப்பதும், படிப்பில் பின்தங்கியவர்களைப் படிப்படியாக மேலேற்ற வழிகாட்டுவதும் அவர் இயல்பு. படிப்பையோ மதிப்பெண்களையோ சாதி முதலியவற்றையோ வைத்து, மாணவர்களிடம் கொள்ளும் ஈடுபாட்டில் ஏற்றத்தாழ்வு காட்டமாட்டார்.
எம் கல்லூரித் தமிழ் முதுகலைத் தலைவராக வந்த முனைவர் அ.மா. பரிமணம் அவர்கள் பெரும்புலமையர்; மிகவும் கண்டிப்பானவர்; மிகவும் நேர்மையுடையவர்; முறைமை கடைப்பிடிப்பவர்.
அவரது கறாரான அளவுகோல்படி நெறிமுறை, படிப்பு ஆகியவற்றில் தேறிய தமிழ்த்துறை ஆசிரியர்கள் மிகச்சிலரே. அவர்களுள் தலையாயவர் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி ஐயா அவர்கள் என்பது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பேராசிரியர் அ.மா.ப. வை உணர்ந்தோர்க்கே இது புலனாகும்.
நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய பின்னரே, அவர் மொழிபெயர்ப்புத் துறையில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்குத் தூண்டித் துணை நின்றவர் எம் பூண்டிக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் இராமன் அவர்கள் (மொழிபெயர்ப்புக்கென்றே நடந்த Scholar Miscellaneous என்னும் இதழின் ஆசிரியர்).
மொழிபெயர்ப்பின் இயல்புகள் நுட்பங்கள் முதலியன பற்றி விளக்கும் தகுதி எனக்கில்லை என்றாலும் அதன் சிரமங்களை ஓரளவு உணர்ந்தவன் நான். மூலமொழி இலக்குமொழி இரண்டிலும் புலமை வேண்டும் என்பது வெளிப்படை. செய்திகளைவிடவும் மொழிபெயர்ப்பதைவிடவும் புனைகதை மொழிபெயர்ப்பது கடினம். புனைகதைகளைவிடக் கவிதை மொழிபெயர்ப்புக் கடினம். அண்மைக்காலக் கவிதைகளைவிடப் பழந்தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பு மிகக் கடினம்.
பழந்தமிழ்ப்பாக்கள் கவிதைகள் மட்டுமல்ல. அவை வரலாறு, சமூகம், பண்பாடு முதலியவற்றுக்கான தரவுகளை வழங்கும் மூலங்களாகவும் உள்ளன.
தட்சிணாமூர்த்தி ஐயாவின் பழந்தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள் புலமை மேலோங்கிய மொழிபெயர்ப்புகள். கவித்துவ நயத்தின் பொருட்டுச் சற்றும் துல்லியம் விடுபடுதல் கூடாதென்பது அவர் நிலைப்பாடு.
பழந்தமிழ் நூல்களை அணுகுதல் எளிதன்று. உரைகளைக் கொண்டு தொடங்கிப் பயின்று பயின்று உரைகடந்த சில பொருட்கூறுகளையும் கண்டு தெளிய வேண்டும்; புதிய ஆய்வுகளால் நிறுவப்பட்டவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். ‘தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப் படி’ என்பது சங்கத்தமிழ் பயிலப் பாரதிதாசன் சொல்லும் வழியாகும்.
சொற்பொருள் மட்டுமன்றி மிகநீண்ட தொடரமைப்பும் புரிதலில் சிக்கலை ஏற்படுத்தும்.
‘ஆடுகள மகன்’ என்பதை ‘Son of dancing field’ என்று சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தோர் உண்டு. நம் காலத் தமிழில் - பழந்தமிழிலும் உண்டுதான் - மகன் என்பது உறவுமுறைப் பெயர். பழந்தமிழில் முறைப்பெயராகவும் பொதுவான உயர்திணை ஆண்பாற் பெயராகவும் இருந்ததால்தான் தொல்காப்பியர் ‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ என விதந்து கூறுகிறார் (பெயரியல்). முறைமை சுட்டினால் அவை விரவுப் பெயர் என்கிறார்.
‘ஆடுகளமகன்’ என்பதை ‘ஆட்டன்’ என்கிறது அகநானூறு. (பாடுகின்றவளைப் ‘பாட்டி’ என்னும் வழக்கும் உள்ளது.)
ஒரு சொல்லை, தொடரை உணர்ந்துகொள்ள ஒட்டுமொத்தப் பழந்தமிழ்ப் பாக்களிலும் பயிற்சி வேண்டும்.
சமூக உணர்வும் மொழிபெயர்ப்புக்கு இன்றியமையாதது.
அகநானூற்று முதற்பாட்டின், ‘சிறு காரோடன்’ என்பதை ‘low-born whetstone maker’ என்று மொழிபெயர்த்திருக்கிறார் ஜார்ஜ் ஹார்ட். இது முற்றிலும் பிழை என்றோ, பழந்தமிழ்ச் சொற் பயில்வுக்கு முரணானதென்றோ சொல்ல முடியாது. இத்தொடருக்கு, ‘சிறியனாகிய சாணைக்கல் செய்வோன்’ என்றுதான் ந.மு. வேங்கடசாமிநாட்டாரும் ரா. வேங்கடாசலம் பிள்ளையும் உரை கண்டுள்ளனர். ‘இழிபிறப்பாளன்’ என்னும் தொடர் பழந்தமிழில் இருக்கிறது. ஆனால் தட்சிணாமூர்த்தி ஐயா, Karotan of lowly profession என்று ‘சிறு’ என்னும் அடையைப் பிறப்புக் குறித்ததாக அன்றித் தொழில் குறித்ததாகக் கொள்கிறார். பாட்டில் பிறப்பு விதந்தோதப்படாத நிலையில் ஐயா சமூக உணர்வுவயப்பட்டுப் பொருள் கொள்கிறார்.
நான் 1984இல் கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அப்பாவைத் தேடி எம் இல்லத்திற்கு வரும் நண்பர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் முதலியோரிடம் நான் ஆசிரியப் பணி பெற்றதை அப்பா தெரிவிப்பார். அவர்களில் சிலர் இலவச ஆலோசனை நல்கிச் செல்வார்கள். ஒரு மூத்த, கல்லூரிப் பேராசிரியர், தோற்றத்தில் - நடை, உடை, பாவனைகளில் - மாற்றம் தேவை என்று சொல்லிப்போனார். மறுநாள் தட்சிணாமூர்த்தி ஐயா அவர்கள் வந்திருந்தார்கள். நான் முந்தையநாள் அறிவுரையைச் சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள். “தோற்றம் சில நிமிடங்கள்தான் மதி! முடிந்தவரை பொறுப்பாகப் பாடத்தை ஆயத்தம் செய்து நடத்து” என்றார்கள்.
அவ்வப்போது எழும் சிலபல ஐயங்களை நான் - இன்றளவும் - ஐயாவிடம்தான் கேட்பேன் (அரிதாக வேறு சிலரிடமும் கேட்பேன்). எழுப்பும் ஐயத்திற்கான விளக்கம் கூறித் தொடர்புடையவற்றையும் தெளிவுபடுத்துவார். இதனால் வேறுபல ஐயங்கள் அவரைக் கேட்காமலேயே தீர்ந்துவிடும்.
அப்புறம், ஐயா அவர்களோடு தனிப்பட்ட முறையில் உணர்வொன்றி ஒருவரையொருவர் உசாவிடச் செய்து கொண்டிருக்கும் ‘ஆஸ்த்மா’ர்த்தத் தொடர்பையும் குறிப்பிட வேண்டும். குளிர்காலமெனில் ஐயாவிடம் சற்றுத் தயங்கித்தான் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்; சுருக்கமாகப் பேசுவேன்; முதலில் உடல்நிலை பற்றி உசாவுவேன். ஐயா அவர்களின் துணைவியாரும், செல்வ - செல்ல - மகளும் அவரின் பேறு. விருந்துபேணலில் குறையிருக்காது. ஆனால், அவர் உடல்நலங்கருதி அவ்வப்போது  உரையாடலை அன்போடு குறுக்கிட்டுக் குறுக்கிவிடுவார்கள். நாங்கள் ஐயாவின் நலங்கருதி ஆர்வத்தை அடக்கிக் கொண்டு விடைபெறுவோம். அவர் கோடைக்காலத்தில் என்னிடம் உசாவுவார் (எனக்கு விதிவிலக்காகக் கோடைதான் மூச்சிரைப்புக் காலம்).
சிறப்புச் சொற்பொழிவு, கருத்தரங்கு, பயிலரங்கு எதுவாக இருந்தாலும் அவையோரை ஐயா அசத்திவிடுவார். அண்மையில் கல்லூரித் தமிழாசிரியர்களும் ஆங்கில ஆசிரியர்களும் கலந்துகொண்ட பயிலரங்கில் ஐயா உரையாற்றியதைக் கேட்டு, ஆங்கில ஆசிரியர் பலரும் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி உசாவித் தேடமுற்பட்ட உற்சாகத்தைக் கண்ணாரக் கண்டேன்; நெஞ்சாரக் களித்தேன்; ‘எங்க ஐயா’ என்று உரிமையோடு சொல்லிக்கொண்டு, அவர் புகழ் ஒளியில் நானும் இரவல் கொண்டேன்.
தமிழின் தொல்சீர் செவ்விலக்கியங்களைப் பிறமொழியாளரிடமும், - அவற்றின் துல்லியம் குன்றாமல் கொண்டு செல்ல ஆடம்பரமின்றி அமைதியாக அரிய ஆக்கப் பணிகள் மேற்கொள்கிற ஒரு தமிழ்ச் சாதனையறிஞரைத் தேடி விருதளித்ததன் மூலம் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் பெருமை பெற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து. நானும் ஐயாவின் மாணவருள் ஒருவன் என்பதை எண்ணிப் பெருமிதங் கொள்கிறேன்.
                                                                                     --  பா. மதிவாணன்
பேராசிரியர்
தமிழ்த்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620024
தமிழ்நாடு - இந்தியா





/

Wednesday, 21 June 2017


சேர வாரும் செகத்தீரே!
மார்க்ஸ் 200
        மார்க்சியம்/பொதுவுடைமை என்னும் கருத்துநிலை குறித்த பார்வை கொண்டோரைப் பொத்தாம் பொதுவாக மூன்றாக வகைப்படுத்திக் கொள்ளலாம்: மார்க்சியர்(Marxist), மார்க்சியல்லாதார்(Non-Marxist), மார்க்சிய எதிர்ப்பாளர்(Auti-Marxist).
        மார்க்சியரையும் கட்சி மார்க்சியர், கட்சி சாரா மார்க்சியரென்றல்லாம். உள்வகைப்படுத்தலாம் (கட்சிசாரா மார்க்சியர் இருக்க இயலாதென்பது பொதுவாகக் கட்சி மார்க்சியர் நிலைப்பாடு). மார்க்சியர்(Marxist) மார்க்சியலார்(Marxiolagist) என்றெல்லாமும் பார்க்க இயலும். இருக்கட்டும்.
        என்னைக் கட்சிசாரா மார்க்சிய ஒத்துணர்வாளன்(sympathizer) என்று சொல்லிக் கொள்ளலாம். இதுவும் இருக்கட்டும்.
        மார்க்சியர் இப்போது கருதவேண்டியது, மார்க்சியரல்லாதாரை மார்க்சியராக்குவது கூட அல்ல; எதிர்ப்பாளரை நோக்கிக் செல்லவிடாமல் செய்வதுதான். ஆனால், மார்க்சிய இணக்கம் கொண்ட என்போன்றோரைக் கூட - மேலோட்டமான கருத்து வேறுபாட்டைச் சொல்வதற்கே - மார்க்சியப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.
        மத அடிப்படைவாத இருள் மிகவன்மையாகச் சூழ்ந்துவரும் நிலையில் மார்க்சியர் அந்தக் காலத் தஞ்சை மாவட்ட மாப்பிள்ளை முறுக்கிலிருப்பது நல்லதல்ல.
        இந்தப் பின்னணியில்தான் தோழர் தா.பா. நூலை ஆர்வமாகப் படித்தேன்.
        முன்னுரையைத் தன்னடக்கத்துடன் தொடங்கியுள்ளார் தா.பா. அது வெற்று மரபன்று என்று உணர முடிகிறது. எனினும் விபரீத சக்திகள் அடர்ந்து வரும் சூழலில் இனி பொறுப்பதில்லை என்று கருதி எழுத முற்பட்டதாகக் கூறுகிறார். மிகச் சரி.
        ஐந்து உட்பிரிவுகளுள் முதலாவது, ‘கேள்விகள்’ என்பதாகும். சிறிதும் பெரிதுமாக 41 வினாக்கள் வரிசை எண்ணிட்டு அடுக்கப்பட்டுள்ளன. ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்?’ என்பது முதல் வினா. கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருகின்றனவா? என்று அவர் கேட்கவில்லை; வலுவிழந்து வருவதை ஏற்றுக் கொள்கிறார். இந்த அடிப்படை வினாவிலிருந்து கிளைத்தவைதாம் பிறவினாக்கள் என்று சொல்லலாம்.
        அரசியல் - பொருளாதாரம், வரலாறு, தமிழகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொதுவுடைமைக் கட்சிகளின் திட்டம் - செயல்பாடு, மெய்யியல் முதலியவற்றின் அடிப்படையில் சாமானியம் முதல் நுட்பமானவை வரை, பலருக்கும் பல நேரங்களில் எழுந்த வினாக்களை ஒரு சேர அவர் அடுக்கியுள்ளார். பொதுவுடைமையரின் வறட்டுத்தனங்கள், தவறுகள்(என அவர் கருதுவன) ஆகியவற்றோடு அபாண்டமாகச் சுமத்தப்பட்ட பழிகளையும் ஆதாரங்களோடு சுட்டுகிறார்.
        இருவேறு எல்லைக்கிடைப்பட்ட பொதுவுடைமைக்கட்சிகள், பிற இடதுசாரிகளுள் அவரது விடை தேடும் முறை, விளக்கம் தீர்வு முதலியவற்றை ஏற்காதவர்கள், இவ்வாறு ஏற்காததோடு சில பல வினாக்களைத் தவிர்க்கலாம் என்பவர்கள் புதிதாகச் சிலபல வினாக்களைச் சேர்க்கலாம் என்பவர்கள், எவராயினும் வினாக்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கக்கூடாது. இதுவே இந்த நூலின் முதலாவது முக்கியத்துவம்.
        வினாக்கள், விளக்கங்கள், தீர்வுகளுக்காகப் பட்டறிவும் பன்னூலறிவும் கொண்டு வரலாறு, நிகழ்ச்சிகள், புள்ளி விவரங்கள் முதலியவற்றை அவர் தந்து செல்லும் பாங்கு படிப்பார்வத்தைத் தூண்டுகிறது. சில நூல்களைப் பரிந்துரைத்துள்ளார்.
        ஊன்றிப் படிக்க வேண்டிய பகுதிகள் தடிப்பெழுத்தில் தரப்பட்டுள்ளன.
மேதைகள், அறிஞர்கள். படிப்பாளிகளின் இயல்பும் எளிமையும் பற்றி அவர் காட்டும் சில பகுதிகள் நெகிழச் செய்கின்றன. சான்றாகப் பி.சி. ஜோசி மும்பையில் உருவாக்கிய கம்யூன் பற்றிய பகுதி(பக்.203-204).
        அணிந்துரையில் ந. முத்துமோகன் “இந்த நூலுக்கு ஒரு பதிப்பாசிரியர் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என நயத்தக்க நாகரிகத்தோடு ஒரு விமரிசனக் குறிப்பை வைக்கிறார். தா.பா. சில பகுதிகளை முழுமையாகப் பக்கம்பக்கமாகக் காட்டியுள்ளார். முத்துமோகன் சொன்னது சரிதான் என்றாலும், நூலின் நெகிழ்வு சலிப்பில்லாத ஓட்டத்திற்குக் காரணமென்று தோன்றுகிறது. மிகச்சில இடங்கள் தானெனினும் அணி நடையும் மிகையின்றி நயஞ்சேர்க்கிறது.
        சரளமாக எழுதிச் சொல்லும்போது சில இடங்களில் சிறிதே சுயமுரண் தலைகாட்டுவதாக எனக்குத்  தோன்றுகிறது. “பொதுவுடைமை என்பது மனிதநேயத்தை அறநெறியாகக் கொண்ட அரசியல் பொருளாதார அமைப்பாகும். எனவே, விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு விஞ்ஞானமுறையில் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்கிறார். மனிதநேய அறநெறியும் மார்க்சிய விஞ்ஞான முறையும் முரணானவையல்ல என்றாலும் வெவ்வேறானவை.
1. மார்க்சியத்தின் (அதன் பொருள்முதல்வாத) அடிப்படை இன்றும் நிறுவப்பட்டு
  வருகிறது.
2. பொதுவுடைமைக் கட்சிகள் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும்.
3. மாநில(தேசிய இன?)க் கட்சிப்பிரிவுகளுக்குத் தனித்தியங்கும் உரிமை வேண்டும்.
4. சமூகப் பிரச்சினைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
5. பொதுவுடைமைக் கட்சிகள் அல்லாத சனநாயக் கட்சிகளுடன் கொள்ளும் உறவில்
  வறட்டுத்தனம் கூடாது. அதேநேரத்தில் விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கையும்
  தேவை என்பனபோலப் பலவற்றைக் கூறுகிறார் தா.பா. நிறைவாக அவரைக் குறித்த
  தனிப்பட்ட அகவய, புறவய விமர்சன நியாயங்களுக்கு அப்பால்
        எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
        மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்னும் நிலையில் அவரது நூலைத் திறந்த மனத்தோடு படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.


Wednesday, 2 December 2015

ஆய்வுலகில் பேய் எழுத்து

தமிழாய்வுகளின் தரச்சரிவு பற்றிய குரல்கள் 1970களிலேயே எழுந்தன. கோ. கேசவனின் “மண்ணும் மனித உறவுகளும்“ நூல் அணிந்துரையில் க. கைலாசபதி குறைபட்டுக் கொண்டிருந்தார். 1980களில் நான் முனைவர் பட்ட ஆய்வு முடிந்ததற்கான பாராட்டு விழா ஏற்புரையில் போதாமையை – எனது போதாமையை, பட்டத்திற்கும் ஆய்வறிவிற்குமான இடைவெளியை – சுட்டிக்காட்டித் தட்டச்சிலும் அதனை அவையோர்க்குத் தந்தேன். வெங்கடசாமிநாதன் ஒரு முறை தமிழக அரசியல் பண்பாட்டுப் போக்கு இதற்குமேல் சீரழிய முடியாத அளவு தாழ்ந்துவிட்டது என்று கருதும்போதெல்லாம் அதற்கும் மேலாகத் தாழ்கிறது என்றெழுதினார்.
      தமிழாய்வுலகின் பேய் எழுத்துக்கு (Ghost Writing) சில வரலாற்றுப் படிநிலைகள் உண்டு. ஆய்வறியும் நுட்பமும் உடைய அறிஞர் சிலர், பணிச்சுமை முதலியன காரணமாய்ப் பேய் எழுத்தை நாடினர். இது முதற்கட்டம்.
பின்பு அரைகுறை அறிஞர்கள் குறைநிரப்பும் பொருட்டு, நிறைபுலமையுடைய பேய் எழுத்தாளரை நாடினர். இஃது அடுத்த கட்டம்.
அடுத்து ஏதுமறியாதார், அரைகுறை அறிவுடைய பேய் எழுத்தரை நாடினர்.
1990களில் ஏதுமறியா ஆய்வாளர் ஏதுமறியாப் பேய் எழுத்தரை நாடியதை உடனிருந்து கண்டதன் விளைவாக என் “ஆய்ந்திறம்“ வெளிவந்தது.
சலபதி(பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) தம், “அந்தக் காலத்தில் காப்பி இல்லை“எனும் நூலின் “தமிழில் பகடி இலக்கியம்“ என்னும் கட்டுரையில் ஆய்ந்திறத்தைப் பிரபலப்படுத்தினார்.
1995 ஏப்ரலில் “கரந்தைத் தமிழ்ச் சங்க“ வெளியீடான “தமிழ்ப் பொழில்“ இதழில் “ஆய்ந்திறம்- முதற் பதிப்பு“ வெளியாயிற்று. எனது “அடிவானம் நோக்கிச் சில அடிகள்“ எனும் நூலின் இரண்டாம் பதிப்பில்(2014) பின்னிணைப்பாகத் தந்தேன். பதிப்பு முன்னுரையை அதில் காணலாம்; மூலத்தை மட்டும் வலைப்பூவில் அச்சிடுகிறேன்.

சிறப்புப் பாயிரம்

திருமால் வரை முதலாத் தென்குமரி யாயிடைப்
பலவாம்பல் கலைக்கழங் கல்லூரி தம்மோ
டளவிலார்; பயின்றிடவே யஞ்சல் வழிக்கல்வி
எனுமிவற்றாற் பட்டம் பெற்றார்; பலரவருள்
பணிபெறுதற் கிடையில்மேற் பட்டஞ் சிலபெறவும்
பணியிலுளார்; பதவியொடூ தியவுயர்;வு பெற்றிடவும்
பதிந்திடுவா ராராய்ச்சித் துறைகளிலே யன்னவர்;க்காய்க்
கண்ணுதலான் தருமிக்குக் காட்டிய நெறிமிகுத்து
மண்ணுலகின் மாநாடி யெனுந்தொகையு ளொன்றாக
விந்நூற்காய்த் திறமென்னு மினியபெயர்; தனைச்சூட்டித்
தந்தனன் றமிழாய்வு தழைத்திடப்
புளுகணிச் சித்தனெனும் புகழ்மிகு புலமையோனே.

நூல்

01. ஆய்வரே முயறலும் அடுத்தவர்; நாடலும்
   ஆயிரு வழியவாம் ஆய்வுரை ஆக்கல்
02. தாமே எண்ணித் தலைப்புத் தேர்;ந்து
   நூலகம் வல்லுநர்; களமிவை கண்டு
   தொகுத்துத் தரவுகள் வகுத்து நூலாக்கல்
   ஆய்வரே முயலும் வழியெனப் படுமே
03. அஃதிவண் நுவலா தடுத்தவர்; நாடி
   ஆய்வுரை ஆக்கிடும் வகைநுவன் றிசினே
04. பல்கலைக் கழகப் பதிவொன்று கொண்டே
   சொல்லவும் பெறுவர்; ஆய்வர்; எனச்சிலர்;
05. பதிந்தவர்; எனவிவர்ப் பகர்;தலே சரியாம்
06. அன்னவர்; தாமே அடுத்தவர்; நாடுவார்;
07. அடுத்தவ ரென்பா ரொப்பந்த மேற்றுக்
   கொடுத்தவா றாய்வுரை முடிப்பவ ராவார்;
08. ஆய்நெறி யாளரே ஒப்பந்த மேற்றலும்
   அடுத்தவ ரொருவரை யமர்;த்தித் தருதலும்
   ஆய்வர்;க்கு வாய்த்திடும் ஆகூழ் என்ப.
09. ஒப்பந் தம்மே பகுதியும் ;முழுமையும்
   எனவிரு பாற்படும் என்மனார்; தெரிந்தோர்;
10. பதிந்தவர்; தந்த தலைப்பிற் கேற்பப்
   பல்வகைத் தகவல் திரட்டி எழுதலும்
   அவர்தரு தரவுகள் அமைவுற வாக்கலும்
   இயல்சில மட்டும் எழுதித் தருதலும்
   பகுதியொப் பந்த முறையெனப் படுமே
11. முழுஒப் பந்த முறையது தானே
   தலைப்பு முதலாத் தட்டச் சிட்டுக்
   கட்டமைத் தாய்வுரை அளித்தல் ஈறா
   அனைத்துப் பணியும் ஆற்றுத லாகும்
12. ஒப்பந் தப்பணி ஒப்பிய ஒருவர்
   உள்ளொப் பந்தம் விடுதலும் உண்டு
13. ஒப்பந் தப்பணிக் காலங் காணின்
   இயல்பும் விரைவும் எனவிரு வகைத்தாம்
14. ஒப்படைத் திடற்கு நெடுநாள் முன்பே
   ஒப்பந் தஞ்சயெல் இயல்பா கும்மே
15. சின்னாள் முனர்ச்செயின் விரைவெனப் படுமே
16. ஆணையின் பின்னர்; ஆக்குத லன்றி
   ஆயத்த ஆய்வுரை ஆக்குநர்; உளரே.
17. அவர்;தாம்
   பக்க அளவினைப் பாங்குறப் பேணுவர்;
18. இளநிலைத் திட்டப் பணியுரை இரட்டல்
   முதுநிலைக் காகும் அவ்வுரை இரட்டல்
   மெய்யியல் முதுநிலைப் பட்ட ஆய்வுரை
   அஃதோர்; ஈரரை அளவாய் இழுப்பின்
   தகுமாம் முனைவர்; பட்டம் தனக்கே.
19. துறைதலைப் பொடுவகை காலமும் கருதித்
   தொகையினைப் பேசித் தொடங்குவர்; பணியை.
20. தொடங்கையில் முன்தொகை முடிவினில் முழுத்தொகை
   படிப்படி யாகத் தவணையாய்த் தருந்தொகை
   முழுமையாய் முன்னரோ பின்னரோ தருந்தொகை
   எனத்தொகை தருதல் பல்வகை யாமே
21. பரிந்துரை பேரம் எனுமிவ் வாற்றான்
   குறித்த தொகையினைக் குறைத்தலும் உண்டு.
22. நட்புப் பதவிசெல் வாக்கொடு நாடின்
   ஒப்பந் தத்தொகை தவிர்;க்கவும் கூடும்.
23. ஆய்வுரை அடுத்தவர்; ஆக்கலாம் ஆய்வரே
   வாய்மொழித் தேர்;வினுக் குரியவர்; ஆதலின்
   அவ்வுரை ஒருமுறை படித்திடல் நன்றாம்.
24. வாய்க்கு மாயின் தேர்;வரை ;நாடி
   உற்றுழி யுதவி உறுபொருள் கொடுத்தல்
   அதனினும் நன்றெனச் சிலர்;நவின் றிடுவர்;
25. முந்தையோ ராய்வுரை தம்பெய ரிட்டுத்
   தந்திடும் துணிவு விஞ்சிய முறைதான்
   அகப்பொருட் களவுகொள் அருந்தமிழ் நெறிபோல்
   புலத்துறைக் களவாம் புதுவதன் றாயினும்
   அழுக்கா றுடைச்சில வறிஞர்; காணின்
   இழுக்கெனக் கூறி யிகழ்வதோ டன்றிச்
   சட்டம் பேசிப் பட்டமும் தடுப்பர்;.
26. ஆதலின்
   பதிந்தவர் யாவரும் பாதுகாப் புடனே
   பற்றிடத் தக்கதிவ் ஆய்ந்திற நெறியே.

புறனடை

27. நாமே பல்கலைக் கழகம் நாடி
   எழுதியோ எழுதுவித் தோபெற லன்றிப்
   பல்கலைக் கழகம் தாமே வந்து
   பற்பல மதிப்பியற் பட்டம் நல்கல்
   அரசியல் திறமஃ தாய்ந்திறப் புறனடை.
*******


இப்போது என் “ஆய்ந்திறம்“ காலாவதியாகிவிட்டது. “தமிழாய்வாளர்கள்“ தாமே எதை எழுதினாலும் பட்டம் வாங்கிவிடலாம் என்கிற நிலை வந்துவிட்டது. எனவே அரைகுறைப் பேய்களுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. ஒரு சான்றை என் முகநூலில் (Mathivanan Balasundaram) பதிவுசெய்துள்ளேன். தொடர்புடைய விவாதங்களையும் அதில் காணலாம். சான்றை மட்டும் இங்குத் தருகிறேன்.